சுடச்சுட

  

  மோகனூர் மணல் குவாரியை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோகனூர் காவிரி மணல் அள்ளும் குவாரி அமைந்துள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைந்துள்ளது. அந்த மணல் குவாரியில் அள்ளப்படும் மணல், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள இரண்டாம் விற்பனை நிலையத்தில் குவித்து வைக்கப்படுகிறது.
   பின் அங்கிருந்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி மணல் இரண்டாம் விற்பனை நிலையத்தில், கூலித் தொகை பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது.
   அதையடுத்து, மோகனூர் குவாரியில் மணல் அள்ளக்கூடாது என தொழிலாளர்கள் உள்பட அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மோகனூர் மணல் குவாரியில் மணல் அள்ளுவது நாமக்கல் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன் உத்தரவின்படி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
   இதனிடையே, மணல் இரண்டாம் விற்பனை நிலையம் மற்றும் மணல் குவாரி பிரச்னை தொடர்பாக நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 27-ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மோகனூர் காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியில் விதிமுறை மீறி மணல் அள்ளப்படுகிறது. அதனால் பாசன வசதி அளித்து வந்த வாய்க்கால், ஆறு உள்ளிட்டவை வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கின்றன. எனவே, மோகனூர் காவிரி ஆற்று மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் பலர் வலியுறுத்தினர்.
   இதனால், மணல் குவாரி பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதே வேளையில், மணல் குவாரியில் மணல் அள்ளுவது தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும் உத்தரவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
   இந்த நிலையில், மோகனூர் காவிரி ஆற்றில் அரசு விதிகளுக்கு முரணாக செயல்படும் மணல் குவாரியை ரத்து செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம், மோகனூர் நகர, வட்டார பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
   அந்த மனு விவரம்: மோகனூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்ட சர்வே எண். 305-இல் 18.63 ஹெக்டேர் பரப்பை தாண்டி ஒருவந்தூர் கிராமம் வரை சுமார் 200 ஹெக்டேர் அளவுக்கு மணல் முறைகேடாக அள்ளப்பட்டுள்ளது. மணல் அள்ளுவதற்கு இரண்டு பொக்லைன் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல், 1 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ளப்பட வேண்டும்.
   ஆனால், அரசு விதியை மீறி 10 முதல் 15 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, 7 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை விதிகளுக்கு முரணாக மணல் அள்ளப்படுகிறது. தற்போது செயல்படும் மணல் குவாரியால் கொமரிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களுக்கு குடிநீர் அளிக்கும் குடிநீர் ஊற்றுக் கிணறு பாதிக்கப்படுள்ளது.
   பட்டணம், சீராப்பள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் நாமக்கல், எருமப்பட்டி, கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் கிணறுகள் பாதிக்கும் நிலையும் உள்ளது. மேலும், காவிரி ஆற்றை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயகளின் விளைநிலங்களுக்கு உரிய தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
   விவசாயிகள் மற்றும் இயற்கை வளம் காக்க விரும்பும் தன்னார்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மோகனூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் பகுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai