Enable Javscript for better performance
குடிநீர் தேவையைச் சமாளிக்க முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் தேவையைச் சமாளிக்க முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 28th November 2016 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர்த் தேவையைச் சமாளிக்க உள்ளாட்சி துறை அதிகாரிகள் உடனடியாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மைச் செயலர் எம்.டி. நஜிமுதின் அறிவுறுத்தினார்.
     நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மைச் செயலர் எம்.டி. நஜிமுதின் தலைமை வகித்து, பல்வேறு அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
     அப்போது அவர் பேசியது: நாமக்கல் மாவட்டம் வறட்சியான மாவட்டம், பருவமழை குறைந்து விட்ட காரணத்தால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் போதுமானதாக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
     எனவே விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வேளாண்மைத்துறை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். குறைந்த நீரைக்கொண்டு சாகுபடி செய்யக்கூடிய நவீன சொட்டுநீர் பாசன முறைகள், குறைந்த நாள்களில் விளையக்கூடிய பயிர்களை சாகுபடி செய்தல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குதல் போன்ற அனைத்துப் பணிகளையும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
     அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளை சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வறட்சியால் பயிர்கள் பாதிக்கின்றபோது அவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வாய்ப்பாக அமையும்.
     கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை உடனுக்குடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலமாக விவசாயிகளுக்கு கடனுதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
     கடனுதவி தேவைப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் வேளாண் கடன்களை வழங்கிட கூட்டுறவுச் சங்கங்களும், பிற வங்கிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டவைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மண்புழு உரங்களையும் தேவையான அளவு விவசாயிகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
     மாவட்டத்தில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு துறை அலுவலர்கள் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குத் தேவையான குடிநீர் வழங்குவதற்கு நீர் ஆதாரங்களைத் தொடர்ந்து கண்காணித்து குடிநீர் விநியோகத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும்.
     மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட, அரசு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கடைகோடி கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
     முன்னதாக புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசுத் திட்டங்கள் மூலம் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர்கள் எம்.ராஜசேகரன், ஜி.மகாத்மா, வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.ராமதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) த.லோகநாதபிரகாசம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் நா.பாலசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai