Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரைந்து இடம் வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரைந்து இடம் வழங்க வேண்டும்

    By குமாரபாளையம்,  |   Published on : 28th November 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தின் பாரம்பரியத் தொழிலான விசைத்தறி நெசவு மற்றும் சாயத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பொதுச் சுத்திகரிப்பு நிலையம் திட்டத்துக்குத் தேவையான நிலத்தைத் தேர்வு செய்து விரைவில் வழங்க வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கேட்டுக் கொண்டார்.
     குமாரபாளையம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பொதுச் சுத்திகரிப்பு பூங்கா அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
     தமிழக அரசு நீர்நிலைகள் மாசடைவதைத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், பாரம்பரியத் தொழிலான விசைத்தறி நெசவுத் தொழிலும், சாயத் தொழிலும் பாதுகாக்கப்படும். மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் பாதுகாக்கப்படும்.
     ஆனால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் நிலத்தைத் தேர்வு செய்து வழங்காமல், இரு குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது என்றார்.
     தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியது: தமிழக அரசு ரூ.700 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் முன்வராமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் 75 சதம் மானியம் வழங்குவதோடு, வங்கிகளும் கடன் வழங்க தயாராக உள்ளன.
     காவிரி ஆற்றில் பெருமளவு சாக்கடை மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதால் தண்ணீர் பெரிதும் மாசடைந்து குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்டது. ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருங்கிணைந்த பொதுச் சுத்திகரிப்பு பூங்கா திட்டத்தைச் செயல்படுத்துவது கட்டாயமாகி உள்ளது. காலம் தாழ்த்தாமல் சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த பூங்கா அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி, அதற்கான திட்ட அறிக்கையை வழங்க வேண்டும். இத்திட்டத்தால் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளின் விசைத்தறி மற்றும் கைத்தறித் தொழில் பாதுகாக்கப்படும். மேலும், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்படும் என்றார்.
     இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி மற்றும் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai