சுடச்சுட

    

    எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்: தலைவராக எம்.பொன்னம்பலம் தேர்வு

    By DIN  |   Published on : 05th September 2016 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவராக எம்.பொன்னம்பலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
     தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் 2016-19ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இந்த தேர்தலை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், தேர்தல் குழு தலைவருமான ஆர்.வாங்கிலி முன்னின்று நடத்தினார். இதில் தலைவர், செயலர், பொருளாளர், உப தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், இணைச் செயலர் என 7 பதவிகளுக்கு 17 பேர் போட்டியிட்டனர்.
     இவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 979 உறுப்பினர்களில் 958 பேர் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
     அதன்படி, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பொன்னம்பலம் 523 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இப்போதைய தலைவர் நடராஜன் 404 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து, பொன்னம்பலம் 119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சொக்கலிங்கம் 16 வாக்குகளும், ராமலிங்கம் 11 வாக்குகளும் பெற்றனர்.
     செயலர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்திக் 566 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் 385 வாக்குகள் பெற்றார். எனவே, கார்த்திக் 181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கணபதி 673 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அம்மையப்பன் 263 வாக்குகள் பெற்றார். எனவே, கணபதி 410 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
     இதேபோல், தங்கவேலு 606 வாக்குகள் பெற்று உப தலைவராகவும், அபி செந்தில் என்கிற செந்தில்குமார் 669 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகவும், மாது என்கிற மாதேஸ்வரன் 566 வாக்குகள் பெற்று துணைச் செயலாளராகவும், கணேசன் 582 வாக்குகள் பெற்று இணைச் செயலராகவும் வெற்றி பெற்றனர்.
     தற்போது தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பொன்னம்பலம் ஏற்கெனவே இச் சங்கத்தில் 13 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றி உள்ளார். தற்போது வெற்றி பெற்றுள்ள செயலாளர் கார்த்திக் தவிர, மீதமுள்ள அனைத்து நிர்வாகிகளும் இவரது அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai