சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கலாம்

  By நாமக்கல்,  |   Published on : 06th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு தற்போது அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துணைப் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்களும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
   தமிழகத்தில் கடந்த ஏப்.29-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆண்டு முழுவதும் நடைபெறும் பணியாகும். எனவே ஏப்.30 ஆம் தேதி முதல் கடந்த மாதம் 20-ஆம் தேதி வரை தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
   இதற்காக வந்த விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குப் பின் பரிசீலனை செய்யப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் 2017 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் முதல் தொடங்கி உள்ளது.
   இதன்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சேர்க்கைக்காகப் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி வரை இதற்கான பணி நடைபெறும். மேலும் வேலைக்குச் செல்பவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 11 மற்றும் 25-ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
   மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம். கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
   அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துணைப்பட்டியல் வெளியிடப்படும். 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் மட்டுமல்லாது, அக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ள துணைப் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்களும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai