சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

    By நாமக்கல்,  |   Published on : 06th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 799 இடங்களில் விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலையோரங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதும், பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம். அந்த வகையில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
     நாமக்கல் நகரைப் பொறுத்த வரையில் குளக்கரை திடல், சேலம் சாலை, பரமத்திவேலூர் சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை என நகர் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. மாவட்ட அளவில் 799 இடங்களில் சுமார் 3 அடி உயரம் முதல் பத்து அடி உயரம் வரை சிங்கம், யானை, மயில், கருடன், மூஞ்சூறு போன்ற பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்துள்ள சிலைகளையும், பாகுபலி விநாயகர், யாழி வாகனத்தின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளும், கிருஷ்ணருடன் விநாயகர் இருப்பது போன்றும், சிவன் முக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
     மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை அடுத்து பெரும்பாலும் சிலைகள் அனைத்தும் தண்ணீரில் கரையக்கூடிய காகிதக் கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும், ரசாயனமற்ற வர்ணங்களால் அழகுபடுத்தப்பட்டும் இருந்தன.
     இவற்றில் 111 இடங்களில் இந்து முன்னணி சார்பிலும், 688 இடங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை மூன்று நாள்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என போலீஸார் உத்தரவிட்டுள்ளதால் திங்கள்கிழமை மாலை முதலே விநாயகர் சிலைகளை ஒரு சிலர் நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
     அதன்படி, நாமக்கல் மாவட்டம் காவிரி ஆறு அருகில் உளள மோகனூர் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
     ஒரு சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 3 நாள்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு 8-ஆம் தேதி கரைக்கப்பட உள்ளன. எனவே பதட்டமான பகுதிகளில் சிலைகள் அமைந்துள்ள இடத்தில் அசம்பாவிதத்தைத் தவிர்க்க காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
     நாமக்கல் நந்தவனத் தெரு ஆர்ய வைசிய நந்தவன கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மஹாகணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜையும் நடந்தது.
     நாமக்கல் கடைவீதியில் அதிகாலை முதலே விநாயகர் சதுர்த்திக்கான பிள்ளையார் சிலைகள், குடை, தோரணம், பூஜை பொருள்கள், விளாம்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
     ராசிபுரம்: ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில், 15 ஆம் ஆண்டு விழா விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
     இதனையொட்டி நண்பர்கள் குழு சார்பில் 7 அடி பிரதோஷ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுபோல் ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் வைசியா பிரண்டஸ் கிளப் சார்பில் 6 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. 11 அடி விஸ்வரூப தரிசன ஸ்ரீ லிங்க தீர்த்த அபிஷேக கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
     குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடுகளுடன் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையம் பேருந்து நிலையம், காவிரிக் கரை, சின்னப்பநாயக்கன்பாளையம், வேமன்காட்டுவலசு, தட்டாங்குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அலங்கார வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
     இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு தோற்றங்கள், அளவுகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு சுண்டல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
     குமாரபாளையம் பாண்டுரங்கர் கோயில் முன்பாக விநாயகர் சிலை வழிபாட்டை அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியர் கோலாட்டத்துடன் நடத்தியது காண்போரைப் பெரிதும் கவர்ந்தது. இச்சிலைகளுக்கு நாள்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு குமாரபாளையம் பழைய காவிரி பாலம் படித்துறை பகுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கரைக்கப்படும்.
     
     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai