சுடச்சுட

  

  தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து சாகுபடி பரப்பு குறைவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், எருமப்பட்டி வட்டாரங்களில் கிணற்று பாசனத்தைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
  இந்த வட்டாரங்களில் ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தபட்சம் சுமார் 300 ஹெக்டேர் அளவுக்கு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஆடி, தை பட்டங்களில் மகரந்தச் சேர்க்கை அதிகரித்து பூக்கள் அதிகளவில் காணப்படும். இதனால் அந்தப் பருவத்தில் காய்கள் நன்கு பிடித்து மகசூலும் அதிகரிக்கின்றன.
  அச்சமயத்தில், காய்களும் நன்கு பெரிதாக இருப்பதுடன், தரமாகவும் காணப்படுகின்றன. ஏக்கருக்கு குறைந்த பட்சம் 12 முதல் 15 டன் வரைக்கும் விளைச்சல் கிடைக்கும்.
  கோடைக்காலங்களில் பெட்டி தக்காளி ரூ.1,000 வரை விற்பனையாகிறது. பிறகு விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகளவில் இருப்பதால் விலை குறைந்து 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
  எனவே விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்களை கட்டுப்படுத்த நிலையான விலையை நிர்ணயிக்க வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப்போல தக்காளிக்கும் ஒரு பெட்டிக்கு ரூ. 100 என்று குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  அதுமட்டுமின்றி வளையபட்டி பகுதியில் தக்காளி ஊறுகாய் தயாரிப்பு போன்று மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவோ அல்லது குடிசைத் தொழில் அமைக்கவோ விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
  குறிப்பிட்ட சில கிராமங்களை ஒன்றிணைத்து, அந்தப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிரூட்டும் கிடங்குகள் அமைத்து, தக்காளி இருப்பு வைப்பதற்கு வழிவகை செய்யலாம்.
  இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தக்காளி சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும்.
  இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
  சேந்தமங்கலம், பொட்டிரெட்டிபட்டி, வளையபட்டி பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில், அதிகரிக்கும் விலை பின்பு பெட்டி தக்காளி ரூ.30-க்கு விற்கும் அவல நிலை ஏற்படுகிறது.
  இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளிகளை கீழே கொட்டிச் செல்கின்றனர். ஆனால், விலை அதிகரிக்கும்போது காய்ப்பு இல்லாததாலும், விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை.
  இதுபோன்ற ஏற்ற, இறக்கங்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பெட்டிக்கு ரூ.100 விலை நிர்ணயித்தலே போதுமானதாகும். ஏக்கருக்கு 12 முதல், 15 டன் கிடைக்கும்போது, ஒரு பெட்டி ரூ.100-க்கு விற்றாலே போதுமான லாபம் கிடைக்கும். விவசாயிகள் பாதிப்படைவது தடுக்கப்படும் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai