சுடச்சுட

    

    கர்நாடகத்தில் சேதமான தமிழக லாரிகளுக்கு ரூ. 25 லட்சம் நஷ்டஈடு: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட தமிழக லாரிகளுக்கு அந்த மாநில அரசு தலா ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
     இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
     தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இருப்பினும், விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
     இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கார்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே, சேதமான லாரிகளுக்கு ரூ.25 லட்சம் வீதம் அந்த மாநில அரசு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
     கர்நாடகம், கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் செல்லும் தமிழக லாரிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் மத்திய அரசு ராணுவம் மூலம் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
     காவிரி மேலாண்மை வாரியத்தைக் கூட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
     கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகனங்கள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வாகனங்கள் நுழையவிடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
     கர்நாடக மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நீடித்தால் அந்த மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசு ஆட்சியை பிரகடனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai