சுடச்சுட

    

    வேலைநிறுத்தம்: நாளை 3 லட்சம் லாரிகள் இயங்காது; சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி

    By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் லாரிகள், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், வாகனங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும் வரும் வெள்ளிக்கிழமை (செப்.16) தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றும், இதனால் மாநிலத்தில் சுமார் 3 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
     இதுகுறித்து நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
     கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 60 லாரிகள், 50 பேருந்துகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் ரூ.300 கோடிக்கு மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய கர்நாடக மாநில அரசைக் கண்டிகிறோம்.
     மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் மூலம் சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
     இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப்.16) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளுக்கு விவசாயிகள் அமைப்புகளும், வணிகர்களின் அமைப்புகளும் ஒத்துழைப்பு அளிக்கின்றன.
     இதனால் தமிழகத்தில் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள், கேஸ் லாரிகள் மினி லாரிகள் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது. இதனால் ஒருநாளில் சரக்குப் போக்குவரத்துத் தொழிலில் சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்.
     தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் லாரிகள் தினசரி கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த லாரிகள் செல்ல முடியவில்லை. கர்நாடகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக அம் மாநில அரசு கூறியுள்ள போதிலும், இன்னும் பேருந்து போக்குவரத்தே நடைபெறவில்லை. எனவே, இதே நிலை நீடித்தால் அகில இந்தியா டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மூலம் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லாரிகளும் கர்நாடகத்துக்குள் செல்லாமல் மாற்று வழிகளில் வட மாநிலங்களுக்குச் செல்வது குறித்து முடிவெடுக்கப்படும். பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.
     இந்தப் பிரச்னைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும், சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்துப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். சில அமைப்புகள் பிரச்னைகளுக்காக கலவரத்தைத் தூண்டிவிட்டு, வாகனங்களைச் சேதப்படுத்துவதால் சாலைப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     மாநில சம்மேளனச் செயலர் தன்ராஜ், பொருளாளர் சீரங்கன், நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி, செயலாளர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai