சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: லாரிகள், ஆட்டோக்கள் நிறுத்தம்

  By நாமக்கல்,  |   Published on : 17th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன. அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
   தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம் காரணமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் பேருந்து நிலையங்களில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஹோட்டல்கள், டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.
   மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
   ஒருசில தனியார் பள்ளிகள் மட்டுமே செயல்பட்டன. அதன் காரணமாக, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை. அதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
   அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
   போராட்டத்தில் பங்கேற்றதால் சரக்கு லாரிகள், மணல் லாரிகள் இயங்கவில்லை. சரக்கு, டிரெய்லர், டேங்கர் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட 2 லட்சம் வாகனங்கள், 1 லட்சம் மணல் லாரிகள் இயக்கப்படவில்லை.
   நாமக்கல்லில் உள்ள லாரி சங்க அலுவலகத்திலும், ஆங்காங்கேயும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் டயர் ரீட்ரெட்டிங் டீலர்ஸ், ஆல் மோட்டார் ஒர்க்ஸ்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு 16 சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால், மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
   போக்குவரத்தைத் தவிர, மற்ற எந்த செயல்பாடும் இல்லாததால், மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்தது.
   போராட்டத்துக்கான ஆதரவு முழுமையாக இருந்த நிலையிலும், எவ்வித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
   பரமத்திவேலூரில்...
   பரமத்தி வேலூரில் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கடைகளை அடைத்திருந்தன.
   திருவள்ளுவர் சாலை, அண்ணா சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலைய பகுதி, சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
   ராசிபுரத்தில்...
   ராசிபுரம் நகரில் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   நகரில் மருந்து கடைகளைத் தவிர உணவு விடுதிகள், நகைக் கடைகள், மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை முழுமையாக மூடப்பட்டிருந்தன.
   தனியார் பேருந்துகள் ஒருசில பேருந்துகளைத் தவிர பெரும்பாலும் இயங்கவில்லை. நகரில் ஒருசில பெட்ரோல் விற்பனை நிலையங்களைத் தவிர பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. லாரிகள், வேன்கள் இயக்கப்படாததால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்திருந்தது.
   குமாரபாளையத்தில்....
   குமாரபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் விசைத்தறிகள் இயங்கவில்லை. பல்வேறு வியாபார நிறுவனங்களும் இப் போராட்டத்தில் பங்கேற்றதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai