சுடச்சுட

  

  புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு  ஆட்சியர் தகவல்

  By நாமக்கல்  |   Published on : 17th September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
   நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, கோணங்கிப்பட்டி, துத்திக்குளம், கொண்டமநாய்க்கன்பட்டி பகுதிகளில் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மனநலத் திட்ட செயல்பாடுகள், இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   ஆய்வு முடிவில் அவர் தெரிவித்ததாவது:
   நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டாரங்களில் உள்ள 150 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
   இதுவரை 189 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைக்கப்பட்டு, திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மனநலம் குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு புதுவாழ்வு மனநலத் திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொல்லிமலை வட்டாரத்திலும் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
   புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.29.67 கோடி நிதியுதவி மூலம் 7 வட்டாரங்களிலும் உள்ள சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் 41,768 குடும்பங்களும், 6,045 மாற்றுத் திறனாளிகளும், 6,223 நலிவுற்றோர்களும், 19,624 இளைஞர்களும் பயன்பெற்றுள்ளனர்.
   ஒரே தொழில் செய்யும் மகளிரைக் குறைந்தது 20 முதல் 50 வரை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழு என்னும் மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 வட்டாரங்களில் 8,378 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு 333 ஒத்த வாழ்வாதார தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
   இதுவரை 289 தொழில் குழுக்களுக்கு ரூ. 2.40 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்து பயனடைந்து வருகின்றனர்.
   புதுவாழ்வு திட்டம் மூலம் கொல்லிமலை வட்டாரத்தில் அரப்ளி காபி, மிளகு உற்பத்தியாளர்கள் தொழில்கூட்டமைப்பு தொடங்கப்பட்டு ரூ. 25.57 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் கூட்டமைப்பின் மூலம் 2.08 மெட்ரிக் டன் மிளகு கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தவிர தற்சமயம் கூட்டமைப்பின் மூலம் சுமார் 50 மெட்ரிக் டன் காபி கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
   நிகழாண்டில் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ஆடு வளர்ப்போருக்கான கூட்டமைப்பும், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
   இந்த ஆய்வின்போது புதுவாழ்வுத் திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ஜி.குமரன் உட்பட உதவித் திட்ட அலுவலர்கள், வறுமை ஒழிப்புச் சங்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai