சுடச்சுட

  

  கம்பனுக்கு விழா கொண்டாடுவது சமுதாயத்துக்கு நல்லது: டாக்டர் அ.அறிவொளி

  By DIN  |   Published on : 18th September 2016 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கம்பனுக்கு விழா கொண்டாடுவது சமுதாயத்துக்கு நல்லது, ராமனின் குணாதிசயங்களை ஆண்களும், பெண்களும் முழுமையாக அறிந்து கொண்டால் நாட்டில் ஒழுக்கக் கேடுகள் குறையும் என்றார் டாக்டர் அ.அறிவொளி.
  நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பர் விருது வழங்கும் விழா
  கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. டாக்டர் பி.செல்வராஜ், ராம.சீனிவாசன், டி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கம்பன் கழகச் செயலர் அரசு பரமேசுவரன் வரவேற்றார்.
  திருச்சியைச் சேர்ந்த டாக்டர் அ.அறிவொளிக்கு கம்பர் விருதும், நாமக்கல்லைச் சேர்ந்த தா.ஜெயராமுலுவுக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்பட்டன. விழாவில், 5 பேருக்கு துறைசார் வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்டன.
  இயற்கை விவசாயம் விருது-மோகனூர் அஜீத் அய்யருக்கும், சமூக ஆர்வலர் விருது- திருச்செங்கோடு மு.வஜ்ரவேலுவுக்கும், மனிதநேய மக்கள் மருத்துவர் விருது-நாமக்கல் டாக்டர் க.கோகுலக்கண்ணனுக்கும், நல்லாசிரியர் விருது-மேலப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கா.இளங்கோவுக்கும், நம்பிக்கை நாயகன் விருது-சிங்கப்பூர் மதிக்கும் வழங்கப்பட்டன.
  விழாவில் கம்பர் விருதுபெற்ற டாக்டர் அறிவொளி பேசியது:
  வால்மீகி ராமாயணம் நிகழ்வுகளைப் பதிவு செய்ததுபோல் இருக்கும். ஆனால், கம்ப ராமாயணம் கதாபாத்திரங்களைப் போற்றி பேச வைக்கிறது.
  ராமனுக்குப் பெருமையை உருவாக்கியவர் கம்பர். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
  ராமாயணத்தை பெருமைக்குரிய காப்பியமாக மாற்றியவர் கம்பர். இதை வேறு எந்த கவிஞனாலும் செய்திருக்க முடியாது. திருக்குறள் தரும் செய்திகளை, கம்பர் ராமாயணத்தில் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார். கம்பனுக்கு விழா கொண்டாடுவது இந்த சமுதாயத்துக்கு நல்லது.
  கம்ப ராமாயணம் சமூக காப்பியம். ராமனின் குணாதிசயங்களை ஆண்களும், பெண்களும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் சமூகத்தில் ஒழுக்கக் கேடுகள் குறைந்து நல்லது நடக்கும் என்றார்.
  விழாவில், "தோள் கண்டார், தோளே கண்டார்' என்ற தலைப்பில், பொதிகை தொலைக்காட்சி இயக்குநர் பால.ரமணி பேசியது:
  கம்பர் 10 ஆயிரம் பாடல்களை எழுதி எடுத்துக் கொண்டு, அதை அரங்கேற்றம் செய்ய திருவெண்ணெய்நல்லூரில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு 10 நாள்கள் அவர் காத்திருந்த நிலையில் அரங்கேற்றம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. அதன்பிறகே அவர் ஸ்ரீரங்கம் வந்து ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.
  ராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற படைப்புகள் இனி வரப்போவதும் இல்லை. இந்த படைப்புகளுக்கு எந்த காலத்திலும் அழிவும் இல்லை. ராமனின் வீரத்தை பார்ப்பவர்களுக்கு ராமனின் வேறு எந்த உறுப்புகளும் கண்ணுக்குத் தெரியாது, அதனால்தான் கம்பர், "தோள் கண்டார், தோளே கண்டார்' என்று எழுதியுள்ளார். கம்பனை போற்றும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற, கம்பன் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதற்கு அனைவரும் உதவ வேண்டும் என்றார்.
  அதைத்தொடர்ந்து பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெ.மலர்க்கொடி, ர.ருத்ரகுமார், உ.லாவண்யா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கம்பன் கழக அமைப்பாளர் மா.தில்லை சிவக்குமார் நன்றி கூறினார்.
  இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு கம்பர் காவியத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்துவதில் முன்னிற்பது அரசியலே, அறவியலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
  முனைவர் வாணியம்படி அப்துல்காதரை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில் அரசியலே என்ற தலைப்பில் சோ.ராமகிருஷ்ணன், ரெ.ராஜ்குமார், ரா.தெய்வநாயகி, அறவியலே என்ற தலைப்பில் பேராசிரியர் ஆத்தூர் சுந்தரம், முனைவர் க.முருகேசன், புலவர் சித்ரா சுப்ரமணியம் ஆகியோர் பேசுகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai