Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை- Dinamani

சுடச்சுட

  

  ஜேசீஸ் திருச்செங்கோடு டெம்பிள் இயக்கத்தின் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
  இந்த இயக்கத்தின் சார்பில், வெண்பா வார விழா ஒரு பகுதியாக கேஎஸ்ஆர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டது. மருத்துவர் ஜமுனா சரவணராஜா, சந்தியா ஆகியோர் மாணவிகளின் தன்னம்பிக்கை, ஆரோக்கியம் குறித்த மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
  விழாவில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், யசோதா பிரபாகரன், கிருத்திகா கோவிந்தசாமி, வாரவிழா தலைவர் கவிக்குமார், ஜேசீஸ் தலைவர் திருநாவுக்கரசு, செயலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  இலவச மருத்துவ முகாம்
   அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மாணிக்கவாசகம் முகாமுக்குத் தலைமை வகித்தார். பரமத்தி பேரூராட்சித் தலைவர் உஷா முகாமைத் தொடக்கி வைத்தார்.
  முகாமில், கண் நோய், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், பச்சிளம் குழந்தைகள், சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 1,127 பேர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மணி, பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.
  ராசிபுரம் வட்ட ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்
   ராசிபுரம் வட்ட ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் ராசிபுரத்தில் நடைபெற்றது.
  சங்கத் தலைவர் ந.சின்னசாமி தலைமை வகித்தார். எம்.பி.சுப்பிரமணியம் வரவேற்றார். செயலர் ஆர்.சேரலாதன் அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கும் ஓய்வு ஊதியர்களுக்கும் ஜனவரி 2016 முதல் ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையும் வழங்கி உள்ளது.
  இதேபோல் தமிழக அரசும் அதன் பணியாளர்கள், ஓய்வு ஊதியர்களுக்கும் மத்திய அரசின் 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம், ஓய்வூதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய தொகை செலுத்துவதில் விலக்கு அளிக்கவும் வேண்டி தீர்மானம் நிறைவேற்றினர். சங்க நிர்வாகிகள் ஆர்.ருக்மாங்கதன், எம்.ஓபுளிசெட்டி, எஸ்.பெரியசாமி, எம்.குமாரசாமி, ஆர்.கோவிந்தராசன், எஸ்.வரதராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  செப்.26-இல் நாட்டுக்கோழி வளர்ப்பில்
  மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி
  நாமக்கல்-திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வரும் 26-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம் குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் வரும் 26- ஆம் தேதி மாலை 1.30 மணிக்கு பண்ணையாளர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பில் மழைக்கால பராமரிப்பு, மூலிகை மருத்துவ முறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
  வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு
   பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வீடு வழங்க பாரத பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன் பெற ராசிபுரம் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
  இதுகுறித்து நகராட்சி ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளதாவது: பாரத பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன் பெற நகராட்சிப் பகுதியிலுள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நான்கு உட்கூறுகள் ஒன்றான கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் அடிப்படையில் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்துக்குக் குறைவான வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5 சதம் மேற்படும் வட்டி மானியத்துடன் அதிகப்படியாக 323 சதுர அடி பரப்பளவு வீடு வழங்கப்படவுள்ளது.
  மேலும் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5 லட்சத்துக்கு மேற்படும் வட்டிக்கு மானியத்துடன் அதிகபட்சம் 646 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் தகுதியுள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அரசுப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்
  குமாரபாளையத்தை அடுத்துள்ள படைவீடு அரசு உயர்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
  பள்ளித் தலைமையாசிரியர் என்.பிரபாகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் சரக கரூர் வைஸ்யா வங்கியின் கோட்ட மேலாளர் என்.ராகவேந்திரன் பங்கேற்றார். செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜேஷ் கண்ணன் இயக்கத்தை தொடக்கி வைத்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கம், சேவை மற்றும் பணிகள் குறித்து பேசினார். இதில், ஆசிரியர்கள் பி.வாசுதேவன், ஏ.ஊமைத்துரை, ஜி.கலைமகள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai