Enable Javscript for better performance
பெரியார் 138-ஆவது பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

  

  ராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் 138-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  பாரதிதாசன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திராவிடர் கழக நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை வகித்தார். நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். மதிமுக நகரச் செயலர் நா.ஜோதிபாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர அமைப்பாளர் து.பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  குமாரபாளையத்தில்
  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் குமாரபாளையம் காவேரி நகரில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று கத்தேரி சமத்துவபுரத்தில் முடிவடைந்த இருசக்கர வாகனப் பேரணியை மாவட்ட மகளிரணித் தலைவி ரேணுகா திராவிடமணி தொடக்கி வைத்தார்.
  தொடர்ந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, நாமக்கல்லில் தந்தை பெரியார் மாளிகை எனும் பெயரில் இயங்கி வரும் நகர்மன்ற அலுவலகத்தின் பெயரை மாற்றக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது. மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்டச் செயலர் சரவணன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  மழையின்றி கருகும்
  நிலக்கடலைச் செடிகள்
   குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைச் செடிகள் போதுமான மழையின்றி வாடி கருகுகின்றன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
  குமாரபாளையம், பல்லக்காபாளையம், தட்டாங்குட்டை, சத்யா நகர், காடச்சநல்லூர், மக்கிரிபாளையம், படைவீடு, மேட்டுக்கடை, அருவங்காடு, வெப்படை, செளதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதைப்பு ஏற்ற பருவத்தில் பெய்த மிதமான மழையை நம்பி சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.
  குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அவ்வப்போது பெய்த லேசான மழை நிலக்கடலைச் செடிகள் வளர்ச்சிக்கு உதவிய நிலையில், தற்போது மழையின்மையால் பூ வைக்கும் நிலையில் வாடி வருகின்றன. கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில், செடிகள் தண்ணீரின்றி கருகிக் காய்ந்து வருகின்றன.
  மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகள், நிலக்கடலைச் செடிகளைக் காக்க வழியின்றி வேதனையில் வாடி வருகின்றனர். போதிய மழையின்மையால் மானாவாரி விவசாயம் கைவிட்ட நிலையில், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையாவது பலனைக் கொடுக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளை கடுமையான வெயிலும், மழையின்மையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓரிரு மழை பெய்தால்கூட கருகும் நிலக்கடலைச் செடிகளை காக்கலாம் என மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் மானாவாரி விவசாயிகள்.
  பரமத்திவேலூர் அருகே
  முதியோர் மீது தாக்குதல்
  பரமத்திவேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியோர்களை மர்ம நபர்கள் அம்மிக்கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
  ஈரோடு மாவட்டம், சோளக்காளிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (65). இவர் தனது தங்கையான பொன்னம்பலம் மனைவி செல்லம்மாளை (64) காண்பதற்காக பரமத்திவேலூர் அருகே பொத்தனூருக்கு வந்துள்ளார்.
  சனிக்கிழமை வீட்டில் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் அம்மிக்கல், சுத்தியலால் தலையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
  சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தார் அவர்களை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரமேத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai