Enable Javscript for better performance
சமூக நோய்களுக்கு தீர்வு சொல்லக் கூடியது கம்ப ராமாயணம்: முனைவர் அப்துல் காதர்- Dinamani

சுடச்சுட

  

  சமூக நோய்களுக்கு தீர்வு சொல்லக் கூடியது கம்ப ராமாயணம்: முனைவர் அப்துல் காதர்

  By நாமக்கல்,  |   Published on : 19th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக நோய்களுக்கு மருந்தும், தீர்வும் சொல்லக்கூடியது கம்ப ராமாயணம் என்றார் முனைவர் வாணியம்பாடி அப்துல் காதர்.
   நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கம்பன் விழாவில் "கம்பர் காவியத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்துவதில் முன்னிற்பது அரசியலே, அறவியலே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
   நடுவராகச் செயல்பட்ட முனைவர் வாணியம்படி அப்துல் காதர் பட்டிமன்றத்தைத் தொடக்கிவைத்துப் பேசியது: பெரும் பகுதி வணிகர்கள்தான் தமிழ் பணி ஆற்றி வருகிறார்கள், அவர்கள் இலக்கிய அமைப்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளனர். இலக்கிய அமைப்புகளை நடத்துபவர்களுக்கு ஒத்துழைக்க யாரும் வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும், இலக்கிய அமைப்புகளை உயிரோட்டமாக வைத்திருக்க அனைவரும் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
   இலக்கியங்கள் மனிதனுக்கு நல்லவற்றை மட்டும்தான் கற்றுக்கொடுக்கின்றன. நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் தன்னுடைய பதிவில், சிக்கலான வழக்குகளில் தீர்ப்பு எழுதுவதற்கு ராமாயணம் உதவி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
   மனிதனைப் பிளவுபடுத்த ஆயிரம் சக்திகள் இருக்கும், ஆனால், ஒற்றுமை சக்திகளை வலிமைப்படுத்துவது கம்பன் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள்தான். இத்தகைய இலக்கியக் கழகங்கள் நாட்டில் பல்கி பெருக வேண்டும்.
   கம்ப ராமாயணத்துக்கு வந்த எதிர்ப்பு போன்று உலகில் வேறு எந்த இலக்கியத்துக்கும் வந்ததில்லை. ஆனால், எதிர்த்தவர்களை எல்லாம் மதிக்க வைத்த வல்லமை படைத்த இலக்கியமாக கம்ப ராமாயணம் மாறியது. உலகில் 127 ராமாயணங்கள் உள்ளன, சிங்கள மொழியில் அனந்த ராமாயணம் உள்ளது, தெலுங்கில் கடந்த ஆண்டு ராஜகோபால் என்பவர் ராமாயணம் எழுதியுள்ளார்.
   ராமாயணத்தை ஆய்வு செய்த பெரியார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு மொழிகளில் ராமாயணம் இருந்தது. ஒன்று வடமொழி, மற்றொன்று தமிழ் என்று கூறியுள்ளார். எதிர்ப்பாளர்களாக இருந்தவர்களையும் தன்பால் ஈர்க்கும் பெருமை இலக்கியத்துக்கு உண்டு என்பதற்கு பெரியாரின் ஆராய்ச்சி உதாரணம்.
   ரசிக்க, சுவைக்கத் தகுந்த பல இலக்கியங்கள் உள்ளன, ஆனால் அந்த இலக்கியம் சொல்வதைப் பின்பற்ற யாரும் இல்லை. சமூக நோய்களுக்கு மருந்தும், தீர்வும் சொல்லக்கூடியது கம்ப ராமாயணம்தான். கம்பன் புகழை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், இதற்காக நாட்டில் கம்பன் கழகங்கள் பல்கி பெருக வேண்டும் என்றார்.
   பட்டிமன்றத்தில் "அரசியலே' என்ற தலைப்பில் அணித் தலைவர் சோ.ராமகிருஷ்ணன் பேசியது, பரதனையும், சத்துருக்கனையும் வேறு நாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு, ராமனுக்கு முடிசூட்ட தசரதன் நினைத்தது அரசியல் அல்லாமல், வேறு என்ன? அரசியல் நெறிகள்தான் கம்பர் காவியத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றார். இதே அணியில் ரெ.ராஜ்குமார், ரா.தெய்வநாயகி ஆகியோர் பேசினர்.
   "அறவியலே' என்ற தலைப்பில் அணித் தலைவர் பேராசிரியர் ஆத்தூர் சுந்தரம் பேசியது: அரசியல் மானுட சமூகத்தைப் பிரித்து வைக்கும், அறவியில்தான் மானுட சமூகத்தை இணைத்து வைக்கும். ராமாயணம் என்ற காப்பியம் தோன்ற அடித்தளமாக இருந்ததே அறவியல்தான். அறத்தை நிலைநாட்டவே ராமன் பூமிக்கு வந்துள்ளான் என்று கம்பர் கூறுகிறார்.
   அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது ராமாயணத்தின் அடிப்படை, 10 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தசரதன் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிலையிலும், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராத நிலையில், முதுமையை உணர்ந்து மகன் ராமனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தது அறத்தினால் எடுத்த முடிவு அல்லவா?
   இதுபோல் கம்ப ராமாயணக் கதாபாத்திரங்களான கூனி, கைகேயி, வாலி என அனைவரையும் கம்பர் காட்சிப்படுத்தியிருப்பது அறம் சார்ந்தே இருக்கும். இதனால் கம்பர் காவியத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்துவதில் முன்னிற்பது அறவியலே என்றார். இந்த அணியில் முனைவர் க.முருகேசன், புலவர் சித்ரா சுப்ரமணியம் ஆகியோர் பேசினர்.
   இறுதியில் தீர்ப்பு வழங்கி பேசிய முனைவர் அப்துல் காதர், பறவைக்கு இரண்டு சிறகுகள் எப்படி இலக்கை நோக்கி பயணிக்க உதவுகிறதோ, அதுபோல் கம்பர் காவியத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்துவதில் சரிசமமாக அரசியலும், அறவியலும் உள்ளன என்று தீர்ப்பளித்தார்.
   விழாவில், மருத்துவர் ஆர்.குழந்தைவேல் தொடக்க உரையாற்றினார். கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி, செயலர் அரசு பரமேஸ்வரன், அமைப்பாளர் மா.தில்லை சிவக்குமார், மோகனூர் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.பழனியாண்டி, நாமக்கல் வின்னர்ஸ் கிளப் தலைவர் டி.எம்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai