எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் ரூ. 3.15 கோடி சாலை மேம்பாட்டுப் பணி: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்
By நாமக்கல், | Published on : 21st September 2016 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் ரூ.3.15 கோடி சாலை மேம்பாட்டுப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் புதிய சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.துரைசாமி முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று புதிய சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மோளியப்பள்ளி, இலுப்புலி கூத்தம்பூண்டி, பொம்மம்பட்டி ஊராட்சி, கொன்னையார், 85-கவுண்டம்பாளையம், இளநகர் ஊராட்சி என எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றியப் பொதுநிதி ஆகியவற்றின் கீழ் ரூ. 3 கோடியே 15 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 12 புதிய சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ்.நாகராணி, உறுப்பினர்கள் மு.முத்துசாமி, பழனியப்பன், தமிழ்மணி, ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வெங்கடாசலம், உதவிப் பொறியாளர்கள் செந்தில், மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.