சுடச்சுட

    

    3 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆமை வேகத்தில் நடைபெறும் வட்டச் சாலைத் திட்டம்

    By நமது நிருபர், நாமக்கல்  |   Published on : 22nd September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வட்டச் சாலை அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், இன்னும் நிலம் எடுப்புப் பணி கூட நிறைவடையாததால் நாமக்கல் நகர மக்கள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
     நகரில் நுழையும் 750 பேருந்துகள்: நாமக்கல் நகரின் மையப் பகுதியில் 3.53 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், ஈரோடு, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தவிர, கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சேலத்திலிருந்து இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் நாமக்கல் பேருந்து நிலையம் வந்து செல்கின்றன.
     இதுதவிர, ராசிபுரம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நாளொன்றுக்கு 750 பேருந்துகள் வீதம் நாமக்கல் பேருந்து நிலையத்தினுள் வந்து செல்கின்றன.
     1,000-க்கும் மேல் மணல் லாரிகள்: இவை நீங்கலாக திருச்சியில் உள்ள மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்துக் கொண்டு சேலம், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் நாமக்கல் நகரினுள் நுழைந்து வெளியேறுகின்றன. தவிர, திருச்சி, கரூர், மதுரை போன்ற தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்துவித சரக்கு வாகனங்களும் நாமக்கல் நகரினுள் நுழைந்து செல்கின்றன.
     நெரிசலில் சிக்கித் தவிக்கும் நகர மக்கள்: நாமக்கல் கடைவீதி சாலையில் நுழைந்து பரமத்தி சாலை வழியாக தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. நகரினுள் உள்ள குறுகிய சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது.
     குறிப்பாக, நகரின் சேலம் சாலைச் சந்திப்பு, கடைவீதி சாலை, பரமத்தி, மோகனுôர் சாலைச் சந்திப்பு மற்றும் கோட்டை சாலை ஆகியவற்றில் நாள் முழுவதும் வாகனப் போக்குவரத்தால் நெரிசல் நிலவி வருகிறது. இச்சமயங்களில் அவசரப் பணிக்காக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை சென்றாலும் அவற்றுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
     இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வாகனப் போக்குவரத்து மாற்றம், சாலை அகலப்படுத்துதல் போன்றவற்றை போக்குவரத்துப் போலீஸாரும், நகராட்சி நிர்வாகமும் செய்த போதிலும், நகரில் நிலவி வரும் போக்குவரத்துப் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
     வட்டச் சாலையே தீர்வு: இதற்கு நிரந்தரத் தீர்வு காண வட்டச் சாலை அமைத்து, அச்சாலை வழியாக சரக்குப் போக்குவரத்து வாகனம் உள்ளிட்டவை வெளியேறச் செய்ய வேண்டும். அதுபோல், நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தையும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. அதன் பலனாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத் துறை மூலம் வட்டச் சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
     ஆமை வேகத்தில் வட்டச் சாலை பணி: அதையடுத்து, வட்டச் சாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, முதலைப்பட்டி அருகே தொடங்கும் வட்டச் சாலை வேட்டாம்பாடி உள்ளிட்ட கிராமம் வழியாக வள்ளிபுரம் புறவழிச் சாலை அருகே வெளியேறும் வகையில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. அத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் தான் வட்டச் சாலை திட்டத்துக்கான நிலம் எடுக்கும் பணிக்கு வட்டாட்சியர் நியமிக்கப்பட்டார்.
     இதன்பிறகு, ஒவ்வொரு வருவாய் கிராமம் வாரியாக, நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையேவே இன்னும் 4 மாதங்கள் ஆகிவிடும் என்கின்றனர் வருவாய்த் துறை அலுவலர்கள்.
     இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் தம்பிராஜா கூறியது, நிலம் எடுக்கும் பணியை விரைவுப்படுத்தி, வட்டச் சாலைப் பணியைத் தொடங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
     மேலும், லாரிகள் செல்ல மாற்றுச் சாலை உள்ள நிலையில், நகருக்குள் லாரிகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai