சுடச்சுட

    

    மெளனத்தில் நாமக்கல் உள்ளாட்சித் தேர்தல் பிரிவு: குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

    By நமது நிருபர், நாமக்கல்  |   Published on : 23rd September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு ஊடகங்களிலும் வெளியாகி உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவிலிருந்து இதுவரை எந்த விவரங்களையும் பெற முடியாததால் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.
     தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி மற்றும் மேயர் பதவிகளுக்கு எஸ்சி, எஸ்சி பெண்கள், எஸ்டி, எஸ்டி பெண்கள், பெண்கள் பொது
     மற்றும் பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
     நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி மற்றும் மேயர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்கள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு விவரம் குறித்து அறிந்துகொள்ள இந்த அலுவலகத்தை கடந்த 3 நாள்களாகத் தொடர்பு கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள அதிகாரிகள் இடஒதுக்கீடு விவரம் தெரியாது என்று கூறி அரசியல் கட்சியினரைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
     இட ஒதுக்கீடு விவரம் தெரிந்தால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு வார்டை குறிப்பிட்டு விருப்ப மனு அளிக்க முடியும் என்பதால், தேர்தல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் அங்கு எந்த விவரமும் தெரியாது
     என்கின்றனர்.
     இதுபோல் நகராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகள் பொதுப் பிரிவுக்கும், ராசிபுரம் நகராட்சி பெண்கள் பொதுப் பிரிவிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த நகர்மன்றங்களில் வார்டு இட ஒதுக்கீடு விவரம் தெரியாது என்று நகராட்சி ஆணையர்கள்
     கூறுகின்றனர்.
     இதுபோல் பேரூராட்சிகளிலும் தலைவர் இட ஒதுக்கீடு விவரம் வந்துள்ள நிலையில், வார்டு இட ஒதுக்கீடு விவரம் தெரியாது என்று பேரூராட்சி செயல் அலுவலர்கள் கூறுகின்றனர்.
     பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டிலும் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், இட ஒதுக்கீடு விவரம் தெரியாத காரணத்தால் பலரும் ஒரு பதவிக்குப் போட்டியிட 3 முதல் 5 வார்டுகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளனர்.
     அரசிதழில் இட ஒதுக்கீடு விவரம் வெளிவந்துள்ள நிலையில், அந்த விவரங்களை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் தம்பிராஜா.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai