சுடச்சுட

  

  காவிரி பிரச்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: எம்எல்ஏ கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்

  By நாமக்கல்,  |   Published on : 24th September 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலரும், கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ.வுமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்.
   நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
   சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்வதைக் கண்டித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளோம்.
   மேலும் புதிய கல்விக்கொள்கை மற்றும் பொதுசிவில் சட்டத்தைக் கண்டித்து மாநில முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
   பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை வைக்கக் கூடாது என காவல் துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர்.
   இப்போது 70 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி இருக்குமாறு பள்ளிவாசல்களில் ஒலிப் பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் ஒலி மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளது. பள்ளிவாசல்களில் உள்ள ஒலிப் பெருக்கிகளை அகற்ற வேண்டும் எனக் கூறவில்லை.
   எனவே, காவல் துறையினரின் இத்தகைய கட்டுப்பாடு சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், அரசு கவனம் செலுத்தி உரிய அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும். இப்பிரச்னை குறித்து பேரவையில் பேசியுள்ளேன்.
   நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக பாஜக ஆளும் 8 மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
   காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் முடிவுகளை எடுக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்படுவதை தடுக்க இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
   கோவை, ஒசூர் ஆகிய இடங்களில் இந்து முன்னணி, விஎச்பி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று தமிழகத்தில் பரவலாக கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இச்செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
   உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருகிறோம். எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலை திமுக மாவட்டச் செயலர்களிடம் அளித்துள்ளோம். போட்டியிடும் இடங்கள் குறித்து விவரம் விரைவில் இறுதிசெய்யப்படும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் விரைவில் பூரண நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றார்.
   மாநிலத் துணைத் தலைவர் எம்.பி.காதர் உசேன், மாவட்டத் தலைவர் ஒய்.முகமது முபீன், நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.ஷேக் நவீத் உடனிருந்தனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai