சுடச்சுட

    

    கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி ஒருவர் சாவு

    By DIN  |   Published on : 25th September 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கடலூர் மாவட்டம், கோததட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் பாக்கியராஜ் (35). இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியர் விடுதியின் பின்புறம் உள்ள கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கழிவு நீர்த் தொட்டியை திறந்து, அதனுள் இறங்க முயன்றுள்ளார். அப்போது விஷ வாயு தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக அவரை காப்பாற்றி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மாரப்பன்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பேரூராட்சி தலைவர் இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு
     நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியாகி உள்ளது.
    உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. பெண், எஸ்.சி. பொது, பொது பெண், பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, படைவீடு ஆகிய 4 பேரூராட்சிகளின் தலைவர் பதவி எஸ்.சி. பெண் பிரிவுக்கும், ஆர்.புதுப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, அத்தனூர் ஆகிய 3 பேரூராட்சிகள் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், வேலூர், பொத்தனூர், மல்லசமுத்திரம், ஆலாம்பாளையம் ஆகிய 4 பேரூராட்சிகள் பெண் பொது பிரிவுக்கும், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்தி, பாண்டமங்கலம், எருமப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், வெங்கரை ஆகிய 8 பேரூராட்சிகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
     நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
    மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நாமக்கல் கவின்கிஷோர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    கூட்டத்தில், துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி, தணிக்கைக் குழு உறுப்பினர் காசிநாதன் ஆகியோர் பேசுகின்றனர். இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், வார்டு செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    மூத்த வேளாண் வல்லுநர்கள் பொதுக்குழுக் கூட்டம்
     தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
    மாநிலச் செயலர் ஜனகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வேலாயுதம், ஆறுமுகம், சிவராஜ் முன்னிலை வகித்தனர். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    இப் பொதுக் குழுவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் துரை, முரளிதரன், கதிரவன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மருத்துவக் காப்பீட்டுத் தொகையை உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை
     மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நாமக்கல் மாவட்ட மையக் கூட்டம், மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. செயலர் ராஜா வரவேற்றார். மாநில துணைப் பொது ச்செயலர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால் அவரது குடும்பத்துக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவப் படியை ரூ.100-இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்த வேண்டும். செயற்குழு உறுப்பினர் வேணுகோபால் நன்றி கூறினார்.

    தீவன மூலப் பொருள்களைப் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்த அறிவுறுத்தல்
     தீவன மூலப் பொருட்களான பிண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு சுமார் 9 கி.மீ. வேகத்தில் மேற்கில் இருந்து வீசும். தென்மேற்கு பருவமழைக் காலம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் மிதமான அளவில் நீடிக்கிறது.
    இதனால் பகல் வெப்பம் சற்று அதிகமாகக் காணப்பட்டாலும், காற்றின் வேகத்தால் உயர்ந்த வெப்பம் அதிக நேரம் நீடிக்காமல் கோழிகளுக்கு சாதகமாகத் தொடர்ந்து காணப்படும். இதனால் தீவன எடுப்பு இயல்பை ஒட்டி காணப்படும்.
    முட்டை உற்பத்தியும், முட்டை எடையும் இயல்பான அளவுகளில் நீடிக்கும். மற்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் தீவன மூலப்பொருள்களான பிண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
    ஈரல் அயற்சியால் பாதிக்கப்பட்டு, கோழிகள் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் பூஞ்சை நச்சு உள்ளதா என்பதை பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்
     ராசிபுரம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்கத் தலைவர் ஜி.வி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.நஞ்சப்பன் வரவேற்றார். செயலர் பி.ருங்கமாங்கதன், இணைச் செயலர் கே.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அரசு 7-வது ஊதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்திட வேண்டும். முதல்வர் விரைவில் குணமடைந்து அரசு பணியாற்றிட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai