Enable Javscript for better performance
வெண்ணந்தூரில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வெண்ணந்தூரில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 25th September 2016 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சார்பில் ராஷ்ட்ரியா ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இச் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்.
    முகாமில் அவர் பேசியது:
    கைத்தறி நெசவாளர்கள் உடல் நலத்தை பாதுகாத்திட மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியோடு தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி எண்ணற்ற மக்களுக்கு பல்வேறு வகையான உயர் சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானிய உதவியோடு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினருக்கான தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். அதற்காகத்தான் அரசு இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து சிறந்த மருத்துவர்களை கொண்டு பல்வேறு பரிசோதனைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இம் மருத்துவ முகாம்களில் நெசவாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து வந்து இலவசமாக பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
    நோய் வந்த பின் சிகிச்சை பெற்றுக் கொள்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது. பலருக்கு சில நோய்களின் தாக்கம் இருப்பது தெரியாமல் இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற மருத்துவ முகாம்களில் தங்களைப் பரிசோதனை செய்து கொண்டால், நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்படும் பொழுது உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
    எனவே, கைத்தறி நெசவாளர் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு இம் மருத்துவ முகாமில் இலவசமாக உடல் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
    முன்னதாக, இம் மருத்துவ முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் மு.முத்துசாமி வரவேற்புரையாற்றினார். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி, ஆர்.சி.எம்.எஸ்.தலைவர் எஸ்.பி.தாமோதரன், வெண்ணந்தூர் பேரூராட்சித் தலைவர் எஸ்.என்.கே.பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai