சுடச்சுட

    

    அதிக விபத்துகள் நேரிடும் கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

    By குமாரபாளையம்,  |   Published on : 28th September 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே கோட்டைமேட்டில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் பொதுமக்கள் விபத்தில் பலியாவதைத் தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     குமாரபாளையம் கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலையில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தொடர் உயிர் பலியைத் தடுக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டி பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து, கோட்டைமேடு பிரிவில் அமைச்சர் பி.தங்கமணி, ஈரோடு எம்.பி. சி.செல்வகுமார சின்னையன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வாகனங்கள் அதிகளவில் இவ் வழியே செல்லாததால், பாலம் அமைக்க வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
     இந் நிலையில், மேம்பாலம் அமைக்கும் இக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து பொது நல அமைப்புகள் ஒருங்கிணைந்து, கோட்டைமேடு பைபாஸ் மேம்பாலம் அமைக்கும் குழு எனும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிரினைக் கருத்தில் கொண்டு பாலத்தின் அவசியம் குறித்து வலியுறுத்துவது, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என திங்கள்கிழமை நடைபெற்ற இக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
     கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல், இப் பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோருவது, தேசிய நெடுஞ்சாலைகளின் சேவைச் சாலைகளை முழுமையாக அமைக்கக் கோருவது, இச் சாலைகளில் மின்விளக்குள் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக பாலசுப்ரமணியம், நிர்வாகிகளாக சரவணன், ஈஸ்வரன், ஆறுமுகம், குமரன், கண்மணி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai