சுடச்சுட

    

    ராசிபுரம் அருகேயுள்ள சமத்துவபுரம் பகுதியில் தங்கியிருந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கு தொடர்பாக கூலித்தொழிலாளி ஒருவரை வெண்ணந்தூர் போலீஸார் கைது செய்தனர்.
     ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமாயி (70). கல் உடைக்கும் கூலி வேலை செய்து வந்த இவர், கணவர் வெங்கடாசலம் உயிரிழந்த பின்னர் இயலாமை காரணமாக சமத்துவபுரத்தில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் தங்கி, அங்குள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.
     இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி இரவு இவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற அடையாள தெரியாத சிலர் இவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது. இதனால் ரத்தப்போக்கு அதிகமான நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இவரை அதிகாலை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் மூதாட்டி அங்கு உயிரிழந்தார்.
     இதுகுறித்து அத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் போலீஸார் சந்தேகமான முறையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக இந்திய குற்றவியல் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அத்தனூர் ஆலாங்கட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி (31) என்பவர், மூதாட்டியை தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் உயிருக்குப் போராடிய அவர் உயிரிழந்தார்.
     இந்நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், செவ்வாய்க்கிழமை மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai