சுடச்சுட

    

    பாரபட்சம் இல்லாமல் தேர்தல் பணி: அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பாரபட்சம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.
     நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சந்தைப்பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்துப் பேசியது: உள்ளாட்சித் தேர்தலில் மிக முக்கியமான பணி வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை. இந்த இரண்டு பணிகளையும் அலுவலர்கள் மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இப் பணிகளை மேற்கொள்ளவுள்ள அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்வதோடு, நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடுநிலையோடு எவ்விதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
     சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், இதர ஊராட்சிப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையும் பயன்படுத்தப்படவுள்ளன.
     வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தும்போது சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து விளக்கங்களையும், விவரங்களையும் பயிற்சியின்போது முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
     உள்ளாட்சித் தேர்தலை நாமக்கல் மாவட்டத்தில் மிகச் சிறப்பாகவும், நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்தி முடித்திட அனைத்து அலுவலர்களும் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
     முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட ஊராட்சிச் செயலர் எம்.ஹேமா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai