அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் தீவிர மாணவர்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து மாணவர் சேர்க்கைப் பேரணியைத் துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கிப் பேசியது:
அரசுப் பள்ளிகளில் சிறப்பான கல்வி, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில்தான் அனைத்து வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு ஏராளமான சலுகைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்புப் பயிலும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் என மொத்தம் 1,54,756 மாணவ மாணவியருக்கு விலையில்லா பாட நூல்களும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு 1,24,999 பாடக் குறிப்பேடுகளும், 70,128 மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 997 அரசுப் பள்ளிகள், 3 கஸ்தூரிபா காந்தி பால்ய வித்யாலயா பள்ளிகள், 88 அரசு உதவிபெறும் பள்ளிகள், 279 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,367 பள்ளிகள் உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா முன்னிலை வகித்தார். தொடக்கக் கல்வி அலுவலர் மு.செல்வராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உழவன் தங்கவேல், கிராம கல்விக்குழுத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.எம்.மோகன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பி.அன்பழகன், இ.பி.சுப்ரமணியம், பள்ளித் தலைமை ஆசிரியை டி. நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com