பதவி உயர்வு அரசாணை நிறுத்தி வைப்பு: கால்நடை மருத்துவர்கள் போராட்டம்

பதவி உயர்வு அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து, கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on
Updated on
1 min read

பதவி உயர்வு அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து, கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 104 உதவி மருத்துவர்கள், 8 அலுவலர்கள் பங்கேற்றனர்.
 இந்நிலையில் கோரிக்கைகள் குறித்த மனுவை தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் கே.கிரிராஜன், கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் எம்.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம்
 அளித்தனர்.
 போராட்டம் குறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் கே.கிரிராஜன் கூறியது: கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறும் நிலையுள்ளது. கால்நடை மருத்துவப் பணிகளோடு தமிழக அரசு செயல்படுத்தும், இலவச கால்நடைகள் வழங்குதல், வைக்கோல் விநியோகம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தியும் வருகிறோம்.
 எங்களின் இந்த பங்களிப்பை ஏற்று தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மூன்றுகட்ட பதவி உயர்வினை உறுதி செய்யும் பதவி நிலை விருத்தி ஆணையைப் பிறப்பித்தார். இதற்கென பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 49ஐ தற்போது நிறுத்தி வைக்க நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 ஆகையால், அரசு தலையிட்டு முதல்வரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணை எண் 49-ஐ செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். கேரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.
 சிகிச்சை பாதிப்பு இல்லை: மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக கால்நடைகளுக்கான சிகிச்சை பணிகள் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்து, கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு முதலுதவி, அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டம் காரணமாக கால்நடை வளர்ப்போர் பாதிப்படையவில்லை என்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com