நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சி அலுவலர் பெ.பார்த்திபன் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் மகளிருக்கென இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி மற்றும் பட்டப் படிப்பு முடித்த மகளிர்க்கு கணினி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் ஆகிய இரண்டு தொழிற்பிரிவுகளில் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மகளிருக்கு வயது வரம்பு கிடையாது.
பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி நிறைவு செய்தபின் மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழிற்சான்று வழங்கப்படும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், கம்மியர், குழாய் பொருத்துநர் போன்ற தொழிற்பிரிவுகளிலும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கம்பியாள் தொழிற்பிரிவிலும் தொழிற்பயிற்சி அளிக்க கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.
இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), பரமத்தி சாலை, தட்டாங்குட்டை, நாமக்கல் என்ற முகவரியில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04286-267976 என்ற தொலைபேசி எண் அல்லது 9443328279 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.