அரசு மானிய உதவியைப் பெற்று, கால்நடை தீவனம் வளர்ப்புக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செலவை குறைக்கும் வகையிலும், மானியத்துடன் கூடிய மாநில தீவன உற்பத்தி திட்டம் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளுக்கு வீரிய கம்பு 300 ஏக்கரிலும், சோளம் 250 ஏக்கரிலும் மொத்தம் இறவை தீவனப் பயிர் 550 ஏக்கரிலும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரி தீவன உற்பத்திக்காக 0.25 ஏக்கருக்கு 5.625 கிலோ சோளம் மற்றும் 1 கிலோ தட்டைப் பயிறு இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு 3,000 ஏக்கரில் மானாவாரி தீவனம் சாகுபடி செய்யப்படவுள்ளது.
நீர்ப்பாசன வசதிகொண்ட முன்னோடி விவசாயிகள் மூலம் விதைகள் உற்பத்தி செய்ய 40 ஏக்கர் தீவன சோளமும், 10 ஏக்கர் தீவன தட்டைப் பயிர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவன விதைகள் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பால் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கத்திலும், தற்போது நிலவும் வறட்சியைக் கருத்தில்கொண்டும் முன்னோடி விவசாயிகள் மூலம் குறைந்த நீர் தேவை மற்றும் மண்ணில்லா விவசாயம் எனப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் திட்டத்தின் மூலம் 10 அலகுகள் நிறுவப்படவுள்ளது. இதில் பயனாளிகளுக்கு ரூ.15,000 வரை மானியம் வழங்கப்படவுள்ளது.
பால் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கத்தில், குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பயிர் உற்பத்தி செய்ய 200 நிலமற்ற விவசாயிகளுக்கு இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும்
இந்த திட்டத்தில் குறைந்தது இரண்டு கறவை பசுக்கள் உள்ள சிறு, குறு விவசாயிகள், விலையில்லா கறவை பசு திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது.
விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உரிய ஆவணத்துடன், வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.