Enable Javscript for better performance
வேளாண் விற்பனை, வணிகத் துறையின் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வெண்ணந்தூர் வட்டார வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    மின்னக்கல் கிராமத்தில் வெண்ணந்தூர் வட்டார விவசாயிகள் ஆர்வலர்கள் குழுக்களின் விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில், வேளாண் உதவி இயக்குநர் (பொ) மா.சௌந்தர்ராஜன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
    பயிற்சியில் வேளாண் துறையின் திட்டங்கள், மானியங்கள் விவசாயிகள் ஆர்வலர்கள் குழுக்களின் செயல்பாடுகள் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம், பயிற்சியின் நோக்கம், சாகுபடி தொழில்நுட்பங்கள், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.
    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண் அலுவலர்கள் கலைச்செல்வி, பூங்கொடி ஆகியோர் பயிற்சியில் விவசாயிகளுக்கு தினசரி சந்தை நிலவரங்கள், இணையவழி விற்பனை மற்றும் வணிகம், வேளாண் செய்திகள் வழங்கும் ஆண்ட்ராய்ட் செயலியான சுவேதாவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.
    வல்வில் சுதேசி வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவன அலுவலர் நித்தியகல்யாணி பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தியின் மூலம் மதிப்பு கூட்டுப்பொருள்களினால் விவசாயிகள் பெறும் லாபம், சந்தை மதிப்பு, தாங்கள் விவசாயம் செய்யும் பயிரின் விற்பனையை மேம்படுத்துவது, ஆதார விலையை பெருக்குவது, சுயதொழில் மேற்கொள்வதன் அவசியம், சந்தைப் பொருளாதாரம் குறித்து பேசினர்.
    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் வேளாண் உதவி அலுவர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், துணை வேளாண் அலுவலர் வ.பழனிவேல், உதவி வேளாண் அலுவலர்கள் ஆரோக்கியசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, திருநாவுக்கரசு ஆகியோர் பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சோலார் விளக்குப் பொறி செயல் விளக்கம், செய்து காண்பித்தனர்.
    இதன் மூலம் பூச்சி மேலாண்மையில் பூச்சிகளை எளிய முறையில் கட்டுப்படுத்த முடியும். பொருளாதார ரீதியாக நாம் இதனை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி செலவினத்தில் இருந்து விடுபட முடியும். இதனை பயன்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகள் பெருமளவில் மகரந்தச் சேர்க்கைக்கு உறுதுணை புரிந்து அதிக மகசூல் பெற உதவும். மனித உதவியும், மின்சாரமும் இதனை இயக்குவதற்கு தேவைப்படாததால், ரசாயனத் தாக்கத்திலிருந்து மக்களை விடுவித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது என விளக்கினர்.
     பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்த "அட்மா' திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மா.இரமேஷ், கவிசங்கர் ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக வழங்கும் திட்டத்தின் நோக்கம் குறித்து கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai