Enable Javscript for better performance
மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிகள்: விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிகள்: விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்

    By DIN  |   Published on : 11th November 2017 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளைப் பெற விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 38,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மேலும், நிகழாண்டில் 8,437 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலையில், மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. பப்பாளி மாவுப்பூச்சியானது தோட்டக்கலைப் பயிர்களான பப்பாளி, மரவள்ளி, கத்திரி, வெண்டை, தக்காளி, கொய்யா, சீத்தா மற்றும் செம்பருத்தி போன்ற பயிர்களிலும் மற்றும் பார்த்தீனியம், குப்பைமேனி, ஊமத்தை, அரிவாள்மனைப் பூண்டு போன்ற செடிகளையும் தாக்கும் தன்மை கொண்டது.
    இளம் மற்றும் முதிர்ந்த மாவுப் பூச்சிகள் பயிர்களின் இலைகள், இலைக்காம்பு, கணு இடைப்பகுதி, மலர்கள், காய்கள் மற்றும் பழங்களைத் தாக்கி அவற்றிலிருந்து சாற்றினை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்துகின்றன. மாவுப்பூச்சியின் தாக்குதல் காரணத்தால் இளம் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்துவிடும். மேலும், இளம் செடிகள் தாக்கப்பட்டால் பயிர் முற்றிலுமாக அழிந்துவிடும்.
    பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்டு மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அசிரோபேகஸ் பப்பாயே என்னும் ஒட்டுண்ணியை மாவுப்பூச்சி பாதிக்கப்பட்ட வயல்களில் 1 ஏக்கருக்கு 100 எண்கள் அளவில் விட வேண்டும். ஒட்டுண்ணி விடப்பட்ட வயல்களில் பூச்சி மருந்துகள் தெளிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
    சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களில் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ஓர் ஒட்டுண்ணிக்கு 50 பைசா வீதம் விநியோகம் செய்து வருகின்றனர்.
    மேலும், நாமக்கல் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடியில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஓர் ஒட்டுண்ணிக்கு ரூ.1 வீதம் விநியோகம் செய்து வருகின்றனர்.
    ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட செடியிலிருந்து மாவுப்பூச்சியுடன் இலைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வந்து விவசாயியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மரவள்ளி பாதிக்கப்பட்ட பரப்பு போன்ற விவரங்களுடன் வேளாண் அறிவியல் நிலையங்களான சந்தியூர், லத்துவாடி அல்லது ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து 15 அல்லது 20 நாட்களில் விவசாயிகளுக்கு ஒட்டுண்ணியை உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai