Enable Javscript for better performance
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ- Dinamani

சுடச்சுட

  

  பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ

  By DIN  |   Published on : 20th November 2017 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு  ரூ. 2,163 கோடி பயிக் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
  நாமக்கல் மாவட்டக் கூட்டுறவுத் துறை சார்பில் திருச்செங்கோட்டில் 64-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  "நலிவடைந்தோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான கூட்டுறவுகள்'  என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இவ் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியது:
  தமிழக அரசு, கூட்டுறவுத் துறை மறுமலர்ச்சி பெறும் வகையில், 22 ஆயிரத்து 252 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் இத் துறையில் பெரும் முறைகேடுகள் நடந்தன.  விவசாயிகள் கந்துவட்டி,  கடன் சுமையில் இருந்து விடுபட கடந்த 6 ஆண்டுகளில் 63 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 30 ஆயிரத்து 510 கோடிக்கு குறுகிய கால பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.  இதில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1,515 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  ரூ. 3, 066 கோடி பயிர்க்கடன்: கூட்டுறவு துறையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற சுமார் 42 ஆயிரம் பேருக்கு ரூ. 158 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.  சிறு, குறு விவசாயிகள் 12 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் ரூ. 5,318 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  நிகழாண்டு திட்டமிடப்பட்ட ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க் கடனில், ரூ. 3 ஆயிரத்து 66 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஆந்திரம்,  குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் சாதனை படைத்துள்ளது.  இத்திட்டதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 163 கோடி காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.  தமிழக அரசு மீது தொடர்ந்து குறைகூறிவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  மக்களின் மன நிலையை அறிந்து செயல்பட வேண்டும்.  உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவிட்டு, போராட்டங்கள் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
  நலத்திட்ட உதவி
  தமிழக மின்சாரம்-மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  தமிழக சமூக நலம்-சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில்,  2,313 பயனாளிகளுக்கு, ரூ. 16.54 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.  பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,  மாணவியருக்கும், மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள்,  சிறந்த விற்பனையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
  மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்),   சி.செல்வகுமார சின்னையன் (ஈரோடு),   சட்டப் பேரவை உறுப்பினர்கள் பொன்.சரஸ்வதி, சி.சந்திரசேகரன், கே.பி.பி.பாஸ்கர்,  சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சீ.மலர்விழி,  வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன்,  நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  விழாவைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியதாவது:
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 
  மக்கள் நலனை மறந்து, முறைகேடுகளில் ஈடுபட்டதால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai