Enable Javscript for better performance
கந்து வட்டி கும்பல் மிரட்டல்: குடும்பத்துடன் ஆட்சியரிடம் முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    கந்து வட்டி கும்பல் மிரட்டல்: குடும்பத்துடன் ஆட்சியரிடம் முறையீடு

    By DIN  |   Published on : 21st November 2017 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடனை அசலும், வட்டியுமாக செலுத்திய பின்னும் தனது வீட்டிற்கு பூட்டு போட்டும், தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து ஆட்சியரிடம் முறையிட்டார்.
    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பொம்மக்கல்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி(39), திருமண புரோக்கர். இவர் மனைவி கண்ணம்மாள் மற்றும் மகளுடன் மனு அளிக்க திங்கள்கிழமை காலை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
    அவரிடம் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் மயில்சாமி தெரிவித்ததது: பழனிச்சாமி என்பவரிடம் ரூ.2.10 லட்சம் கடனாகப் பெற்றேன். இதனை அசலும், வட்டியுமாக சேர்த்து ரூ.3.58 லட்சமாக கொடுத்துவிட்டேன். பணம் முழுவதும் கொடுத்த நிலையில் என் வீட்டை பூட்டிய பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 2 மாடுகள் மற்றும் டைல்ஸ் கற்கள், சோளத்தட்டுபோர் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
    எனக்கு சொந்தமான வீட்டில் பழனிச்சாமியின் உறவினர்களை தங்க வைத்து எங்களை வீட்டை விட்டு விரட்டினர். இதனால் தெருவில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எனது வீட்டையும், மாடுகளையும் மீட்டுத்தர மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டியும், அசலும் கொடுத்த பின்னும் எங்களை தொல்லை செய்யும் பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, கந்து வட்டி கும்பல் தொடர்ந்து எங்களை மிரட்டி வந்ததால், நான் தலைமறைவாக உள்ளேன். எனவே கந்துவட்டி கும்பலிடம் உள்ள எங்களது வீட்டை மீட்டு தர வேண்டும் அல்லது எங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
    இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸாரை தொடர்பு கொண்ட டி.எஸ்.பி. ராஜேந்திரன், உடனடியாக கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
    மேலும் இந்த கோரிக்கை குறித்து மயில்சாமி ஆட்சியரிட ம் மனு அளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai