நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார நிறைவு விழா
By DIN | Published on : 22nd November 2017 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பொன்விழா ஆண்டு தேசிய நூலக வார நிறைவு விழா நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மைய நூலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா பங்கேற்று மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கினார்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன், மோகனூர் சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லூரி தலைவர் பழனியாண்டி, நாமக்கல் அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கொழந்தவேல் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு அடுத்த சித்தளந்தூர் கிளை நூலகத்தில் 50-ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழா, 50-ஆவது ஆண்டு நூலக பொன் விழா, புரவலர்களுக்கு பட்டயம் வழங்குதல் போன்ற விழாக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கிளை நூலகர் சிவராமன் வரவேற்றார். வாசகர் வட்ட துணைத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அருமை கணபதி, வஜ்ரவேலு, தாண்டவ சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட நூலகர் பாலகிருஷ்ணன் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கிப் பேசினார். நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், வெங்கடாசலம், தலைமை ஆசிரியைகள் சாந்தாமணி, சாந்தி, விழுதுகள இலக்கிய அமைப்பு தலைவர் ரங்கசாமி, செயலாளர் பழனியப்பன், ஞானவள்ளி அப்பாவு ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர்.காந்தி ஆசிரம கிளை நூலகர் அலமேலுமங்கை நன்றி கூறினார்.