Enable Javscript for better performance
ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை: அலுவலர்களுக்கு அமைச்சர் பி. தங்கமணி அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை: அலுவலர்களுக்கு அமைச்சர் பி. தங்கமணி அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 26th November 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்துத் தேவையான இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அறிவுறுத்தினார்.
    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வரவேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
    சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் பேசினர்.
    இதில் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்துப் பேசியது:
    ஊரகப் பகுதிகளில் நீர் ஆதாரங்களைக் கொண்டு குடிநீர் வழங்கவும், தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின்மோட்டார்கள் பொருத்தி மக்களுக்கு குடிநீர் வழங்கவும் வேண்டும். இப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனுக்குடன் நிறைவேற்றி மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    அதேபோல் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பணிகள், தெருவிளக்கு வசதிகள், கிராமத்திற்கான சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.
    வருவாய்த் துறையை பொறுத்த மட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு பட்டாக்களை வழங்க வேண்டும்.
    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் ரூ.189.90 கோடி மதிப்பீட்டில் 25,800-க்கும் மேற்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளும், நகராட்சிகளின் சார்பில் ரூ.115.25 கோடி மதிப்பீட்டில் 56-க்கும் மேற்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளும், பேரூராட்சிகளின் சார்பில் ரூ.47.95 கோடி மதிப்பீட்டில் 2160-க்கும் மேற்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் என மொத்தம் ரூ. 353.10 கோடி மதிப்பீட்டில் 28,090-க்கும் மேற்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
    சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா பேசியது:
    அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் துறை அலுவலர்கள் மக்களுக்கு எடுத்துக் கூறி மக்கள் பயன்பெறுவதற்கு உதவிட வேண்டும் என்றார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் கு. பழனிசாமி, நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்சி ஜெயராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ந.பாலசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai