Enable Javscript for better performance
சமுதாய கண்ணோட்டம் உள்ள பேச்சாளர்கள் உருவாக வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்- Dinamani

சுடச்சுட

  

  சமுதாய கண்ணோட்டம் உள்ள பேச்சாளர்கள் உருவாக வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

  By DIN  |   Published on : 26th November 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இன்றைய சூழலில் சமுதாய கண்ணோட்டம் உள்ள பேச்சாளர்கள் உருவாவது மிகவும் அவசியம் என்றார் நாமக்கல் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன்.
  நாமக்கல் தமிழ்ச் சங்கம் மற்றும் நாமக்கல் மனவளக்கலை மன்றம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் பயிலரங்கம் துவக்க விழா அறிவுத்திருக்கோயில் மனவளக் கலை மன்றத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
  ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேச்சுக்கலை நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசியது:
  முதுகலை பட்டம் படித்தவர்கள்கூட தமிழில் பிழையின்றி எழுதவோ, பேசவோ முடிவதில்லை. இதற்கு காரணம் இப்போதுள்ள கல்வி திட்டம்தான். எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல, அதில் சமுதாய மாற்றத்தை உருவாக்கும் கருத்து இருக்க வேண்டும். இத்தகைய திறம் படைத்த பேச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இப்போதுள்ள சூழலில் சமுதாய கண்ணோட்டம் உள்ள பேச்சாளர்கள் உருவாவது மிகவும் அவசியம்.
  பேச்சில் நகைச்சுவை இருக்க வேண்டும், அந்த நகைச்சுவையும் சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். நகைச்சுவையாகவோ, சிந்தனையைத் தூண்டும் விதமாகவோ, பேச்சு யாருக்கு எப்படி வருகிறதோ, அதன்படி பேசலாம். நன்றாக பேசுவதற்கு நிறைய படிக்க வேண்டும். பேசுபவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க முடியாது என்பதையும், சிந்தனையாளர்களால் நன்றாக பேச முடியாது என்று கூறுவதையும் ஏற்க முடியாது.
  நல்ல சிந்தனையாளராக இருந்தால்தான் நன்றாக பேசவும் முடியும். பேச்சுக்கலை என்பது மகத்தானது, அது லட்சத்தில் ஒருவருக்கு தான் வசப்படும். பேச்சு பக்குவப்படுத்தும், தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும். மாணவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க மட்டுமே தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாமல், நல்ல பேச்சாளராக மாற தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சாளராக முயற்சிக்கும் மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் பேச்சாளர்களின் பேச்சை நிறைய கேட்க வேண்டும். திறமையான பேச்சாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க, 30 வயதுக்குள்பட்ட தேர்வு செய்யப்பட்ட 1,000 இளம் பேச்சாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாநாட்டை மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோட்டில் விரைவில் நடத்த உள்ளது.
  பேச்சில் எப்போதும் உண்மையும், ஆவேசமும் இருக்க வேண்டும், பேச்சு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் பாரதி, சுப்ரமணிய சிவா, வஉசி, பகத்சிங், சுவாமி விவேகானந்தர், அண்ணா, ஜீவா போன்றோரின் பேச்சு, காலத்தைக் கடந்து நிற்பதற்கு காரணம் பேச்சில் உண்மைத்தன்மை இருந்ததுதான்.
  மாணவர்கள் சமுதாய சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். பேச்சை கேட்பவர்களிடம் மாற்றத்துக்கான சிந்தனைய விதைக்க வேண்டும். புத்தகங்களை, சமுதாயத்தை, மனிதர்களை படித்து, அதில் இருந்து கருத்துகளை உள்வாங்கி பேச வேண்டும். பேச்சில் பிறரின் தாக்கம் இருக்கலாம், பாணி இருக்கக் கூடாது என்றார்.
  விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ரா. குழந்தைவேல் தலைமை வகித்தார்.
  உழவன் தங்கவேலு முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்கச் செயலர் கோபால நாராயணமூர்த்தி வரவேற்றார். நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா தொடக்கவுரையாற்றினார். வலையபட்டி சுப்பிரமணியம்- நாவன்மை நாடாளும் என்ற தலைப்பிலும், கோபால நாராயணமூர்த்தி-நேசிப்போம், வாசிப்போம், சுவாசிப்போம் என்ற தலைப்பிலும் பேசினர்.
  தமிழ்ச் சங்கத் துணைச் செயலர் கோ.யுவராஜா, டாக்டர் ப.எழில்செல்வன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நாமக்கல் தமிழ்ச்சங்க அமைப்புத் தலைவர் அரசு பரமேஸ்வரன், துணைத் தலைவர் டி.எம். மோகன், துணைச் செயலர் திருக்குறள் க. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai