Enable Javscript for better performance
லாரி ஓட்டுநர் கடத்திக் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லாரி ஓட்டுநர் கடத்திக் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

    By DIN  |   Published on : 26th November 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரி ஓட்டுநரைக் கடத்திக் கொன்ற வழக்கில் மேலும் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    ராசிபுரம் அருகே குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சுரேஷ் (28). இவர், நாமக்கல் அருகே பொம்மைகுட்டை பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவருக்குச் சொந்தமான லாரியில் ஓட்டுநராகப் பணி செய்து வந்தார்.
    கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சுரேஷை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த தனசேகர் சென்னையில் இயங்கும் தனது லாரிக்கு 4 ஓட்டுநர்கள் வேண்டும் என கேட்டுள்ளார்.
    அதன்பேரில், சுரேஷ் உள்பட அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ், ரவி, சூர்யா ஆகியோர் சென்னை செல்ல சம்மதித்து தலா ரூ. 10 ஆயிரம் முன்பணமாகப் பெற்றனர். ஆனால், அவர்கள் சென்னை செல்லவில்லை. மேலும் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
    இந்த நிலையில் அக்டோபர் 28-ஆம் தேதி தனசேகர் தன்னுடன் வேலை செய்யும், பூபதி, சிலம்பரசன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து ஆட்டோவில் சுரேஷ் வீட்டுக்கு வந்து அவரைக் கடத்திச் சென்றனராம்.
    இதுகுறித்து, சுரேஷின் தந்தை துரைசாமி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீஸார் சுரேஷ் கிடைக்காததால், லாரி உரிமையாளர் தனசேகரை கைது செய்தனர்.
    இந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்ட பூபதி, சிலம்பரசன் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது போலீஸாருக்கு, தெரியவந்தது.
    சுரேஷை ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் திம்பம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதன்பேரில், திம்பம் வனப்பகுதிக்குச் சென்ற நாமகிரிப்பேட்டை போலீஸார் உருகுலைந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி, அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
    இக்கொலை வழக்கில் பூபதி, சிலம்பரசனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai