Enable Javscript for better performance
நெல்லில் இலைச்சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நெல்லில் இலைச்சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அறிவுரை

    By DIN  |   Published on : 29th November 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் நிகழ் சம்பா பருவத்தில் சுமார் 1, 200 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    தற்போது விளைந்துள்ள நெல் பயிரில் காணப்படும் இலை சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்த்திட நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ. அசோகன் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
    நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 1, 200 ஹெக்டேர் பரப்பளவில் கார்கூடல்பட்டி, முள்ளுக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக இலைச் சுருட்டுப் புழு காணப்படுகிறது.
    இதனால், இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு வெண்மை நிறாக மாறி காய்ந்து விடும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு அதற்குள் புழுக்கள் தென்படும். இதன் அந்துப்பூச்சி பழுப்பு நிற இறக்கைகளில் கருப்பு அலை போன்ற கோடுகள் கொண்டிருக்கும்.
    தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதாலும், பரிந்துரையை விட அதிக தழைச்சத்து  இடுவதாலும், வரப்புகளில் களைகள் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பரிந்துரை செய்யப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதாலும் இதன் தாக்குதல் அதிகரிக்கின்றன.
    இதைக் கட்டுப்படுத்த நாற்றுகளைப் போதிய இடைவெளி விட்டு நடுவதுடன், வரப்புகளை களைகள் இன்றி பராமரிக்கப்பட வேண்டும். தேவையான அளவு மட்டுமே உரங்களைப் பயன்படுத்த வேண்டும். 5 சத வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தோ அல்லது உயிரியல் முறையில் டிரைகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 2 சிசி வீதம் மூன்று முறை (33 -ம் நாள்கள், 44-ம் நாள், 51-ம் நாள்) பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
    ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தாக  இருப்பின் கராத்தே 25 மிலி ஃ டேங்க் உடன் சாப் 50 கிராம் ஃ டேங்க் என்ற பூஞ்சானக்கொல்லியையும் கலந்து பயன்படுத்தலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற்றிட நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai