Enable Javscript for better performance
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது: அமைச்சர் பி.தங்கமணி- Dinamani

சுடச்சுட

    

    நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது: அமைச்சர் பி.தங்கமணி

    By DIN  |   Published on : 22nd October 2017 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
    நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
    விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா வரவேற்றார்.
    இதில் 15 பள்ளிகளில் படித்து வரும் 1,870 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.31 கோடி   மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.
     இந்த விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
    கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறோம்.
    தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. தற்போது எந்த வேலைக்குச் சென்றாலும் கணினி அறிவு தேவைப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று, கல்வி மாவட்டம் என்ற சாதனையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
    அமைச்சர் வெ.சரோஜா பேசியது: நிலவேம்பு கஷாயம் 9 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே நிலவேம்பு கசாயம் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
     தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    நிலவேம்பு கஷாயம் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எந்த காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து காய்ச்சலும் குணப்படுத்த கூடியவைதான் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai