கந்து வட்டி கொடுமையால் மணல் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி. மணல் லாரி உரிமையாளரான இவர், லாரிக்காக தனியார் 3 பேரிடம் கடன் வாங்கியிருந்தார். மணல் குவாரிகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இயங்குவதால், லாரிகளுக்கு மாதம் ஒரு முறை தான் லோடு கிடைக்கிறது. இதனால் லாரி மீதான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சோலார் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணம் கொடுத்தவர்கள் கடந்த 2-ஆம் தேதி பறித்துச் சென்று விட்டனர்.
இதனால், மன வேதனை அடைந்த தட்சிணாமூர்த்தி லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்திலுள்ள மரத்தில் அன்றிரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தட்சிணாமூர்த்தியின் மனைவி கொடுத்த புகாரின்பேரில், லாரியை எடுத்துச் சென்ற ஓட்டுநர் மீது மட்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3ஆம் தேதி அவரைக் கைது செய்துள்ளனர். தட்சிணாமூர்த்தியிடம் கந்துவட்டி வசூல் செய்த தனியார் 3 பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறைந்த எண்ணிக்கையிலான குவாரிகள் மட்டுமே இயங்குவதால் லாரிகளை இயக்க முடியாமலும், வாங்கிய கடனைச் செலுத்த முடியாமலும் கடந்த 6 மாதங்களாக மணல் லாரி உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர். மேலும் கடன் தொல்லையால் மணல் லாரி உரிமையாளர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நிகழ்வு நடைபெறாமல் தடுக்க, மணல் லாரிகளுக்கு தினமும் லோடு கிடைக்கும் வகையில் கூடுதல் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும். தட்சிணாமூர்த்தி தற்கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க தவறினால், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனக் கூட்டத்தை கூட்டி போராட்டம் அறிவிப்பு வெளியிடப்படும்.