நாமகிரிப்பேட்டையில் ரூ. 37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வகத் திறப்புவிழா, வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு
Published on
Updated on
1 min read

நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வகத் திறப்புவிழா, வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மகளிருக்கு மானிய விலையில் அரசின் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
 விழாவில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி புதிய ஆய்வகக் கட்டடத்தினை திறந்து வைத்து, 106 பயனாளிகளுக்கு ரூ. 37 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 60 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களையும் வழங்கிப் பேசியதாவது:
 ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இப் பள்ளிக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். புதிய கட்டடங்களை கட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் ஏராளமான நிதி வழங்கி வருகின்றார்கள். உயர்கல்வி பயில உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகின்றது. இதனை தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் பெற்று பயன்பெற வேண்டும்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பழனிசாமி, நாமக்கல் சார் ஆட்சியர் கிராந்தி குமார்பதி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.