ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 62 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்) சார்பில் அக்கரைப்பட்டி ஏல மையத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாலப்பட்டி, அக்கரைபட்டி, பொரசல்பட்டி, செüதாபுரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், வையப்பமலை, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் 2,889 மூட்டை சுரபி ரக பருத்திகளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனர். சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 389-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5 ஆயிரத்து 671-க்கும் ஏலம் போனது. இந்தப் பருத்திகளை நாமக்கல், திருச்செங்கோடு, அவினாசி, அன்னூர், ஆத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்துச் சென்றனர்.