பரமத்தி வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட சோழசிராமணி, அரசம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி கரையோரம் வசித்து வந்த பொதுமக்களை மாவட்ட நிர்வாகத்தினர் வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீர் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதால், காவிரியில் வரும் உபரி நீரை மேட்டூர் அணையில் முழுவதுமாகத் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி கதவணையை கடந்து சென்று வருகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருநத்து. இந்த நிலையில், காவிரியில் வரும் உபரி நீரின் வரத்து அதிகரித்துள்ளது குறித்து புதன்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் சோழிசிராமணி மற்றும் ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தாழ்வான பகுதியில் வசித்துவந்த பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி, சமுதாயக் கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருவதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.