தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சர் வெ.சரோஜா 

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 10 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா. 

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 10 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடக்க விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் அளிக்கும் விழா, திருமண நிதி உதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
 மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 விழாவில் ரூ.14.60 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் நலன்புரி அலுவலகம், விவசாயிகள் பயிற்சி மையம், இந்து சமய அறநிலையத்துறை, பால்வளம் உள்ளிட்ட 14 புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை, பூமி பூஜையிட்டு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
 பின்னர் ரோலேட்டர் எனப்படும் புதிய நடை உபகரணம் திட்டத்தை அறிமுகம் செய்து அதற்கான நடை வண்டிகளை 40 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர். மேலும், மாதாந்திர உதவித் தொகை ஆணைகள், வங்கிக்கடன் மானியம், பேருந்து பயணச்சலுகை அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 300 பேருக்கு அமைச்சர்கள் வழங்கினார். தாலிக்குத் தங்கம் அளிக்கும் நிகழ்ச்சியில் 654 பயனாளிகளுக்கு ரூ.4.43 கோடி மதிப்பில் திருமண நிதி உதவிகள் மற்றும் தாலிக்கு தங்கம், 200 பயனாளிகளுக்கு ரூ.8.15 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களை அளித்தனர். மொத்தம் ரூ.18.81 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்கள் அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
 விழாவில் அமைச்சர் வெ.சரோஜா பேசியது:
 தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். 8 கிராமாக தங்கம் உயர்த்தி வழங்க ரூ. 724 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பெண்கள் கல்வி, சமூக பொருளாதார அளவில் உயர்ந்த நிலையை அடைந்திட பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு அதிலும் 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.545 கோடி நிதி வழங்கப்பட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனமும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com