நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு: சுமைப்பணி தொழிலாளர்கள் அறிவிப்பு

பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 8,9 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய

பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 8,9 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 
சங்க மாநிலக் குழுக் கூட்டம் மாநில உதவித் தலைவர் வி. குமார் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி துவக்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலர் ஆர்.வெங்கடபதி, பொருளாளர் ஆர்.அருள்குமார், சிஐடியு மாநில செயலாளர் சி. திருவேட்டை ஆகியோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும், குறைந்தபட்ச கூலி ரூ. 18,000 நிர்ணயம் செய்யவும் வேண்டும்.
பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய ஊதியத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். மத்திய, மாநில அரசு கிடங்குகளில் பணியாற்றும் சுமைப் பணி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 8, 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொதுவேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது,  கஜா புயலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய தமிழக அரசு போதுமான அளவில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அரசே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்.
புயல் பாதித்த பகுதிகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்கள் உள்பட மற்ற பகுதிகளுக்கும் உடனடியாக கூலி உயர்வு கிடைக்க தமிழக அரசு,  மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசு மற்றும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, சட்ட சலுகைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 4,000 என்பதை உறுதி செய்து வழங்க வேண்டும்.
இன்றைய விலைவாசி உயர்வுக்கு தகுந்தாற்போல் 1 கிலோ முதல் 55 கிலோ எடை வரைக்கும் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 55 கிலோ எடை வரையிலான மூட்டைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தொடர்ச்சியாக பணி நடைபெறும் ரயில்வே கூட்செட்,  மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com