Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் கழிவுகளை வெளியேற்றிய 50 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றம்: இரு குழுக்களாகப் பிரிந்து- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் கழிவுகளை வெளியேற்றிய 50 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றம்: இரு குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் நடவடிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கியதோடு, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கும், நீராதாரங்களையும் மாசுபடுத்திய 50 சாயப் பட்டறைகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இரு குழுக்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை இரவு வரையில் நீடித்தது.
    குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி சாயப் பட்டறைகள் இயங்குவதோடு, இரவு பகல் பாராமல் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகளை வெளியேற்றுவதாகப் புகார் எழுந்தது. வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் சாக்கடைகள் வழியே சென்று காவிரி ஆற்றில் கலப்பதால், மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் 500 கன அடி தண்ணீரும் சுத்திகரித்து விநியோகிக்க முடியாத அளவுக்கு மாசடைவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
    இதையடுத்து, கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், இரு குழுக்களாகப் பிரிந்து விதிமீறிய பட்டறைகளை இடித்து அகற்றும் நடவடிக்கை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.ஜெயலட்சுமி, குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஒரு பிரிவாகவும், ஈரோடு பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் மற்றொரு பிரிவாகவும் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    இதில், காவேரி நகர், ராஜராஜ நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், பெராந்தர் காடு, சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோட்டைமேடு, நாராயணா நகர், கல்லாங்காட்டு வலசு, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய 50 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், அதிலிருந்த இயந்திரங்கள், சாயமிடப் பயன்படுத்தப்படும் சிமெண்ட் தொட்டிகள், நூல் பிழியப் பயன்படும் கிட்டிகள் ஆகியவை உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
    திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சண்முகம் ஆகியோர் இரு குழுக்களின் செயல்பாட்டையும் ஒருங்கிணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சாயப் பட்டறைகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai