Enable Javscript for better performance
இளம் பெண் சாவில் சந்தேகம்: உறவினர்களிடையே மோதல்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினர்கள் இருதரப்பினரிடையே ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள தண்ணீர்பந்தல் காட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவர் மகன் அருள்ராஜ், (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை அடுத்த குரால்நத்தத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகள் விஜயலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ரக்ஷணா என்ற மகள் உள்ளார்.
    இந்நிலையில், புதன்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
    இதைப் பார்த்த உறவினர்கள், விஜயலட்சுமியை மீட்டு ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயலட்சுமி இறந்துள்ளார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் விஜயலட்சுமியின் பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், விஜயலட்சுமியின் உடல் பிரேத சோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் நாமக்கல் சார்-ஆட்சியர் கிராந்தி குமார் விசாரணைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தார். அப்போது அரசு மருத்துவமனையில் உறவினர்கள் இருதரப்பினரும் காத்திருந்தனர். திடீரென விஜயலட்சுமியின் உறவினர்கள், கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டி, அருள்ராஜ், அவரது அப்பா ஆறுமுகம், அம்மா சுமதி ஆகியோரை தாக்க முயன்றனர். அப்போது, போலீஸார் அருள்ராஜை மீட்டு மருத்துவமனைக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது, அருள்ராஜை தாக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மருத்துவமனை கதவின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்து அனைவரையும் சமரசப்படுத்தினர். பின்னர் அருள்ராஜ் பாதுகாப்பாக ராசிபுரம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். மேற்கொண்டு விஜயலட்சுமி மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai