Enable Javscript for better performance
கூடுதலாக 40 மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: எஸ்.யுவராஜ் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    கூடுதலாக 40 மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: எஸ்.யுவராஜ் பேட்டி

    By DIN  |   Published on : 24th March 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 குவாரிகளைத் திறந்து தினமும் 30,000 லோடு வரை மணல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.யுவராஜ் தெரிவித்தார்.
    நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் நீதிமன்றத் தடையால் கடந்த ஓராண்டில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மணல் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுமானத் துறையில் ரூ.10,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த தடையை நீக்கியுள்ளது. இதனால் தனியார் மூலம் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு மணல் இனி ரூ.1,500-க்கு கிடைக்க உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
    நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில் 2 பொக்லைன் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால் லாரிகளுக்கு ஆற்றில் இருந்து நேரடியாக மணல் ஏற்ற முடியாது. எனவே, மணல் இருப்பு மையம் அமைத்து லாரிகளுக்கும் லோடிங் செய்வதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    இது லாரி உரிமையாளர்களின் நலனுக்காகச் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆற்றுப் படுகைகளில் மணல் லாரிகளை நாள் கணக்கில் நிறுத்தி வைக்காமலும், ரெளடி மாமூல் இல்லாமலும், நேரடியாக மணல் இருப்பு மையத்தில் இருந்து மணலைப் பெற்றுச் செல்ல முடியும். இதனால் ஒரு லாரிக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை செலவு குறையும். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மணல் இருப்பு மையங்களுக்கு வரும் மணல் லாரிகளுக்கு ஜிபிஆர்எஸ் பொருத்தப்படுவதால், மணல் திருட்டு நடக்க சாத்தியமில்லை. மேலும், மணல் இருப்பு மையங்களில் எடை மேடைகள் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் ஆன்லைனில் பதிவு செய்தால் ஏற்கெனவே நடைபெற்றுவந்த மோசடிகளை முழுமையாகத் தடுத்து, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வருமானம் பெற முடியும்.
    இதற்காக டாஸ்மாக்கைப் போல் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளுக்கு பொதுப் பணித் துறை மூலம் தனியாக அலுவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுக்க லாரிகளுக்கும் ஜிபிஆர்எஸ் பொருத்த வேண்டும்.
    தற்போது தமிழகத்தில் 4 மணல் குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. இதன்மூலம் தினமும் சுமார் 1,500 லாரிகளுக்கு மட்டுமே மணல் கிடைக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 குவாரிகளைத் திறந்து தினமும் 30,000 லோடு வரை மணல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    முன்னதாக, சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் யுவராஜ் தலைமை வகித்துப் பேசினார். செயலர் காதர் மொகைதீன், பொருளாளர் அகத்தியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகர், செயலர் முருகேசன், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் கைலாசம், செயலர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai