Enable Javscript for better performance
தமிழை உலகுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மாணவர்களை சார்ந்தது: திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழை உலகுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மாணவர்களை சார்ந்தது: திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

    By DIN  |   Published on : 24th March 2018 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் என்ற களஞ்சியத்தை உலகுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மாணவர்களை சேர்ந்தது என்றார் திரைப்பட இயக்குநர்
    எஸ்.பி.முத்துராமன்.
    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.லீலாகுளோரிபாய் தலைமை வகித்தார்.
    இயல்தமிழ் பிரிவில் இதில் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியது:
    அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் நாட்டில் இருக்கும் இருளை போக்க முடியும். எல்லாம் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையைக் கொண்டுவருவதற்கு நாங்கள் பாடுபட்டு தோற்றுப்போனோம். எங்களால் செய்ய முடியவில்லை. நாங்கள் நம்புகிறோம், மாணவர்களாகிய நீங்கள்தான் செய்ய முடியும். எல்லாம் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம். தமிழ் என்ற களஞ்சியத்தை உலகுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மாணவர்களை சேர்ந்தது.
    ஈடுபாடு, உழைப்பு, தன்னம்பிக்கை, ஒழுக்கம் இருந்தால், வெற்றியைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம், வெற்றி உங்களைத் தேடி வரும். படிக்க வயது ஒரு தடையல்ல, எப்போதும் மாணவனாக இருக்கலாம். விடாமல் படித்துக் கொண்டே இருங்கள் என்றார்.
    திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் பேசியது: கல்வித் தரம் கட்டடத்தில் இல்லை, கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்களின் செயல்பாட்டில்தான் உள்ளது. நாட்டில் இன்று உயர் கல்வி பயில்பவர்கள், 8 சதவிகிதம் பேர் தான் உள்ளனர்.
    நீ என்னவாக நினைக்கின்றாயே அதன்படி செயல் வடிவம் கொடுத்தால் வெற்றி பெறலாம். கூடி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான காலம் கல்லூரி காலம் தான் என்றார்.
    நிகழ்ச்சியில் கி.பார்த்திபராஜாவின் நாடகம், ஜவஹர் பால பவன் சிறுவர் சிறுமிகளின் பரதம், கரகம் மற்றும் சிலம்பாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக சுந்தரவினோத் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி கல்வி முன்னாள் இயக்குநர் கா.சேகர், தமிழ்நாடு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் கந்தசாமி நன்றி கூறினார்.
    பொன் விழா ஆண்டு நிறைவு விழா நாள் நிகழ்வு சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai