Enable Javscript for better performance
நாமக்கல் நரசிம்மர், ரங்கநாதர் சுவாமி கோயில் பங்குனி தேர்த் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் நரசிம்மர், ரங்கநாதர் சுவாமி கோயில் பங்குனி தேர்த் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பங்குனி திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராண வரலாற்றுப்படி அனுமனால் கொண்டுவரப்பட்ட சாளக்கிராமம், ஒரே கல்லினால் உருவான மலை வடிவில் நகரின் நடுவில் அமைந்துள்ளது.
    மலையின் இரு புறமும் குடையப்பெற்ற இரு குகைக் கோயில்கள் நாமகிரித்தாயாரோடு கூடிய நரசிம்மரும், ரங்கநாயகித் தாயாரோடு கூடிய ரங்கநாதரும் கலை எழில் மிக்க உருவச் சிற்பங்கள் பலவற்றுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
    இந்த குகைக் கோயில்களின் காலம் கி.பி 8ஆம் நூற்றாண்டு. நரசிம்மர் கோயில் எதிரில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர்த் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    இதைத்தொடர்ந்து, தினமும் காலை 8 மணிக்கு நரசிம்மர் கோயிலில் இருந்து நரசிம்மர் சுவாமி மற்றும் ரங்கநாதர் சுவாமிகள் பல்லாக்கில் திருவீதி புறப்பாடு சென்று அருள்பாலிப்பார்கள். அதேபோல தினமும் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
    அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்ன வாகனத்திலும், சனிக்கிழமை சிம்ம வாகனத்திலும், 25ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 26ஆம் தேதி கருட வாகனத்திலும், 27ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 28ஆம் தேதி யானை வாகனத்திலும் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்கள்.
    29ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய தாரணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பக்தர்கள் மொய் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 30ஆம் தேதி இரவு 7மணிக்கு குதிரை வாகனத்தில் திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது. 31ஆம் தேதி காலை 10.35 மணிக்கு நரசிம்ம சுவாமி திருத்தேர் வடம் பிடித்தலும், மாலை 4.30 மணிக்கு ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர்கள் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அன்று இரவு சத்தாவரணம் கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகின்றனர். ஏப்ரல் 2ஆம் தேதி வசந்த உற்சவமும், 3ஆம் தேதி விடையாற்றி உற்சவம், மின் அலங்காரம் நடைபெறுகிறது. 4ஆம் தேதி புஷ்ப பல்லாக்கு மின் அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெறுகிறது. 5ஆம் தேதி நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவமும், 6ஆம் தேதி ரங்கநாயகி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பி.ரமேஷ், எஸ்.வெங்கடேஷ், கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துவருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து நிறுத்தப்பட்ட நரசிம்மர் சுவாமி தேர் நிகழாண்டு புதுப்பிக்கப்பட்டு புதிய தேர் பவனி நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai