Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு நிலுவை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு நிலுவை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா?

    By DIN  |   Published on : 31st March 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சியால் வாடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டு தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
     நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 75 சதவீத விவசாயிகள் மழையை மட்டுமே விவசாயத் தேவைகளுக்காக நம்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக வழக்கத்தைவிட மிகக் குறைவான அளவே மழை பெய்துள்ளதால் மாவட்டத்தின் பெரும் பகுதி வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
     நாமக்கல் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி கரையோர பகுதிகளான மோகனூர், பரமத்திவேலூர், ஜெடர்பாளையம் பகுதிகளும் இந்த வறட்சியின் பிடியில் இருந்து தப்பவில்லை. 
    இந்நிலையில் வறட்சிக்குள்ளான விவசாயிகளின் சுமையைக் குறைக்க பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்களைப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அதற்கான பங்களிப்பு தொகையும் அளித்தனர். ஆனால், காப்பீட்டு பிரிமியம் செலுத்திய விவசாயிகளில் இதுவரை 25 சதவீதம் பேருக்கு கூட இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 
     இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணன் கூறியது:
    வறட்சியினால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த விவசாயிகள், தங்களுக்கு கண்டிப்பாக பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதைக்கொண்டு பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்காவது சமாளிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். 
    2017-2018 நிதியாண்டு கூட முடிந்துவிட்ட நிலையிலும்,  விவசாயிகளுக்கு 2016-17 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்கு விவசாயிகள் அலைந்து கொண்டிருக்கிறனர், ஆனால், உரிய பதில் இல்லை என்றார்.
    இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 21,516 விவசாயிகள், பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். இதில் நெற்பயிருக்கு விதைப்பு செய்ய இயலாமை இனத்தில் பிரிமியம் செலுத்திய 335 விவசாயிகளுக்கு ரூ.45,20,032 இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
     மேலும் நெல் விதைப்பு செய்து மகசூல் இழப்பீட்டினைச் சந்தித்த 805 விவசாயிகளுக்கு ரூ.7,46,87,229 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல் தவிர, இதர பயிர்களுக்கு பதிவு செய்துள்ள 732 விவசாயிகளுக்கு ரூ.1,05,31,000- இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற முயற்சி செய்து வருகிறோம் என்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai